பக்கம்:காகித உறவு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

காகித உறவு



வேண்டாம். வேண்டவே வேண்டாம். இந்தக் காலத்தில் எழுதப் போய், அவள் காலம் முடிந்து விட்டால், அவளோடு கன்னிகழியாமல் இருக்கும் இரண்டு தங்கச்சி சனியன்களும் அவன் காலில் வந்து உட்கார்ந்தால், அவனால் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்?

முடியாது.

அவனுடைய பெண் குழந்தைகளான பப்பிக்கும், ஸ்டெல்லாவுக்கும் காது குத்தலாமா? முடியாது. அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு மூன்று தடவை, பேப்பரில் காது குத்தியாகிவிட்டது. இனிமேல் அந்தக் 'காதுகுத்து' வேலை எடுபடாது. அப்படியானால் என்ன செய்யலாம்?

அரை மணிநேரம் கழித்து, அவன் இருக்கைக்கு வந்த போது, நிர்வாக அதிகாரி, "என்னாச்சி"? என்றார்.

"மூளையைக் குழப்பிக்கிட்டிருகேன்" என்று அவன் பதிலளித்தபோது தபால்காரர் ஒரு கடிதத்தை நீட்டினார்; அதை அவன் வாங்கிக் கொண்டே, கடித உறையைப் பார்த்தான். தங்கை தமயந்தி கிராமத்திலிருந்து எழுதியிருக்கிறாள். இந்தச் சனியனுக்கு வேறு வேலை இல்லை... வழக்கமான பல்லவியாகத்தான் இருக்கும்.

அன்பில்லாத அண்ணாவுக்கு.

எல்லாம் வல்ல, நியாய அநியாயங்களைக் கடந்த இறைவன் அருளால், நானும் என்விரக்தியும், எழுபது வயது அம்மாவும் அவள் நோயும், இருபத்தெட்டு வயதுத் தங்கை கல்யாணியும், அவளது கல்யான நிராசையும், வழக்கம் போல், நல்லபடியாகவும், ஒற்றுமையாகவும், சொத்தில்லா சுகத்தோடும் சுகமில்லா மனத்தோடும் இருக்கிறோம். இது போல் நீயும், உன் ஸ்கூட்டரும், அண்ணியும், அவள் நகைகளும், பப்பியும், அவள் நாட்டியமும், ஸ்டெல்லாவும், அவள் ஐந்து பவுன் சங்கிலியும் நலமாக இருக்க, சத்தியமாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அண்ணா! நன்றாக நினைத்துப்பார். உனக்கு மூன்று வயதானபோது, உன் அம்மா - என் பெரியம்மா - இறந்து போனாள். எனக்கு விவரம் தெரியாத பருவத்தில், உன் இளைய தாயாரான என் அம்மா, உன்னைக் கொடுமைப்படுத்தினாளோ என்னவோ. ஆனால் எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து அவள் உன்னிடம் இளைய தாயாராக நடக்காமல், உன் பொருட்டு இளைத்த தாயாராகத்தான் நடந்து கொண்டு வந்தாள் என்று நான் - தெய்வ பக்தியுள்ள நான் - எந்தக் கோவிலிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/8&oldid=951468" இலிருந்து மீள்விக்கப்பட்டது