பக்கம்:காகித உறவு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

79


தேஷ்முக் சாவியை வைத்து பெட்டியைத் திறந்தார். பணத்தை வெளியே எடுத்து எண்ணப்போனார்.

பண்டாரம் சிரித்துக் கொண்டான். “ஒன் மினிட் ஸார்.... எண்ணுங்க. நான் பாத் ரூம் போயிட்டு வந்துடறேன்.... டயேரியா மாதிரி இருக்கு” தேஷ்முக் பணத்தை எண்ணி முடித்தார். 90-10 ரூபாய்தான் இருந்தது. 220-80 ரூபாயைக் காணோம். அவருக்கு ரத்தம் கொதித்தது. இவனை விடக்கூடாது. எல்லோரும் பண்டாரம் வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஒரு சிலர் அவனுக்காகப் பரிதாபப்பட்டார்கள்... மாட்டிக்கிட்டானே! உத்தியோகம் போயிடுமே... ஜெயிலுக்குப் போகணுமே... பண்டாரம் அரை மணி நேரம் கழித்துச் சாவகாசமாக வந்தான். தேஷ்முக் சீறினார்.

“பண்டாரம். 220 ரூபாய்க்குமேல் எடுத்திருக்கே... ஒன்னை சஸ்பெண்ட் செய்யப் போறேன். போலீஸில் ரிப்போர்ட் பண்ணப் போறேன்.”

பண்டாரம் அசரவில்லை.

“வாட்...? 310-90 ரூபாய் சரியாய் இருந்துதே...”

“நான் எண்ணிப் பார்த்தேன். 90-10 தான் இருந்தது.”

“எப்படி ஸார் இருக்கும்? நீங்க வரதுக்கு ஐந்து நிமிஷத்துக்கு முன்னதான் செக் பண்ணினேன்... 310-90 இருந்தது.”

“நீ இப்படி சொன்னா என்னய்யா அர்த்தம்?”

"நீங்க எண்ணும்போதே.... கொஞ்சத்தை எடுத்துப் பைக்குள் வச்சிருக்கலாம்.... யார் கண்டா?”

“ஏய். நீ வரம்பு மீறிப் பேசறே.... நான் டெபுடி டைரெக்டர் தேஷ்முக்... என்னையா திருடுனதா சொல்றே?”

“ஸார் நான் நல்ல குடும்பத்தில இருந்து வந்தவன்... நான் எடுத்திருப்பேன்னு நீங்கதான் வரம்பு மீறிப் பேசறீங்க...”

“ஓ மை காட். நீ இண்டர்நேஷனல் பிராடாய் இருப்பே போலிருக்கே...”

“ஸார் வார்த்தையை அளந்து பேசுங்க... கேஷ் பாக்ஸில் இருந்து பணத்தை எடுத்து.... பைக்குள் போட்டுக்கிட்டதுமில்லாமல்.... என்மேலேயே பழி போடுறீங்களே...”

“ஓய். பணத்தை எடுத்ததை ஒப்புக்கொள். இல்லேன்னா... போலீஸுக்கு போன் பண்ணுவேன்....”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/81&oldid=1383362" இலிருந்து மீள்விக்கப்பட்டது