பக்கம்:காகித உறவு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

பண்டாரம் படுத்தும் பாடு


“அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் அனுப்பி வைத்தார்... உங்களைப் பார்க்கறதுக்கு ஸ்டேஷனுக்கு வரத்துடித்தார். ஆனால் அவர் ஒய்புக்கு ஸீரியஸ்னு திருச்சியிலிருந்து தந்தி வந்தது. போய் விட்டார். டோன்ட் ஒர்ரி ஸார்... ஒங்களுக்கு ரூம் புக் பண்ணியாச்சு. ஊட்டி போறதுக்கு நீலகிரி எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் பண்ணியாச்சு... என்னையும் உங்களோட வந்து. சுற்றிக் காட்டச் சொன்னார். போகலாமா?”

போனார்கள். பியூனின் அன்பினாலும், அவன் செலவழித்த பணத்தாலும், படேசிங் மகிழ்ந்து போனார். பியூன் என்றால், இவனல்லவோ பியூன் ஊட்டியிலும் சரி, கோயம்புத்துரிலும் சரி, ஒரு நயா பைசா இதுவரை அவரைச் செலவழிக்க விடவில்லையே, நிச்சயம் அவனை அட்டெண்டராக புரமோட் செய்ய வேண்டும்!

ஞாயிற்றுக்கிழமை சென்ட்ரலில் இறங்கி, அன்றே நீலகிரி எக்ஸ்பிரஸில் ஊட்டி போய், புதன் கிழமை விசாரணைக்காக அலுவலகம் வரப் போவதாகவும் ஆவன செய்யும்படியும் தான் எழுதிய பர்ஸனல் கடிதத்திற்கு அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் எடுத்துக் கொண்ட முயற்சியை அவர் பாராட்டியதோடு தாம் ரிட்டயராவதால் காலியாகும் இடத்திற்கு அவரைப் போடும்படி சிபாரிசு செய்ய வேண்டுமென்றும் நினைத்துக் கொண்டார்.

ஊட்டி போய்விட்டு, எம்.எல்.ஏ.ஹாஸ்டலில ஒய்வெடுத்துக் கொண்டிருந்த படேசிங், பியூன், ‘டீக்காய்’ டிரஸ் பண்ணிக் கொண்டு வருவதைப் பார்த்து வியந்தார். அதுக்கென்ன? பியூன்னா, வெட்டியாய்த்தான் இருக்கணுமா? டெர்லின் கூடாதா? பியூன் அவரை பிரைவேட் கார் ஒன்றில் அலுவலகம் அழைத்துப் போனான்.

பண்டாரம் சகிதமாய் வந்த படேசிங்கைப் பார்த்து. அட்மினிஸ்ட்டிரேட்டிவ் ஆபீசர் ஆச்சரியப்பட்டுப் போனார்.

அவர் பேசுவதற்குள், படேசிங் முந்திக் கொண்டே ‘ஐ ஆம் லாரி மிஸ்டர் கண்ணுச்சாமி! ஒங்க, ஒய்பு எப்படி இருக்காங்க?’ என்று கேட்டு வைத்தார்.

அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசர் கண்ணுச்சாமி திகைத்தார் வந்ததும், வராததுமாய் ‘ஒய்பை’ப் பற்றிக் கேட்கிறானே, இவனுக்கு அறிவிருக்கா? அவர் மனைவி அழகிதான் அதுக்காக...?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/84&oldid=1383386" இலிருந்து மீள்விக்கப்பட்டது