பக்கம்:காகித உறவு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரத்தத் துளிகள் பயிராகின்றன

ந்த 'வயக்காடு' முழுவதுமே, பொன் பச்சை நிறத்தில் மின்னியது. நிறத்தைக் காட்டி, தன் நிலையைக் காட்டும் நெற்பயிர்கள், பச்சை நிறத்திலிருந்து, பொன்னிறத்துக்கு மாறத்துடிக்கும் இறுதிநிலைக்கு இடைப்பட்ட இந்தப் பொன் பச்சை நிறத்தில், பச்சை மதலைகள்போல் நெற்கதிர்களும், இப்போது சுட்ட சட்டி நிறத்தில் சுடர்விட்டன. 'மூணு கோட்டை' பாசனம் கொண்ட அந்தக் கிணற்றின் சரல் குவியலில் இருந்து நிறம்மாறி, தன் நிலையைக் காட்டும் நெற்பயிரை, நிலத்தின் கேசங்கள் போல் தோன்றிய அந்த உணவுப் பயிர்களைப் பொதுப்படையாகவும், தன் மூணு மரக் கால்’ விதப்பாட்டை குறிப்பாகவும் பார்த்துக்கொண்டிருந்த வினைதீர்த்தான், சரலில் இருந்து இறங்கி, வரப்பு வழியாக, நடந்து தன் நிலத்துக்குப் போனான்.

நாலடி உயரங்கொண்ட நெற்பயிர்களுக்கு, ஐந்தே முக்கால் அடி காவல் தெய்வம் போல், மீசையில்லாமலே கம்பீரமாகவும், சிவப்பு நிறமில்லாமலே கவர்ச்சியாகவும் தார்மீக ஒளியுடனும், சட்டை போடாமலே, சட்டை கழட்டிய பாம்புபோல் மேனி மினுக்கும் வினைதீர்த்தான், வயலை மெய்மறந்து பார்த்துக்கொண்டு நின்றான். பின்பு பலமாக வீசிய காற்றில், நெற்பயிர்கள் தோகை விரித்தாடி, தங்கச் சரட்டில் தொடுக்கப் பட்ட முத்துக்கள் போலவும், 'மசக்கையான' பெண் போலவும், நெற்கதிர்கள் சாய்ந்து நிமிர்ந்தன. குலுங்காமல் அசைந்த நெற்பயிர் ஒன்றை கைகளால் வருடிவிட்டுக் கொண்டு, கரும்பச்சை புடவைக்கு, பச்சைக் கரைபோல் தோன்றிய அருகம்புல் மொய்த்த வரப்பில் உட்கார்ந்து, எதையோ யோசித்துக்கொண்டிருப்பவன் போலவும், எதையுமே யோசிக்காத யோகி போலவும், குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தான். பின்னாலிருந்து வெட்டுக்கிளிகள் தாவுவதை வைத்து யாரோ வருவதைச் சத்தம் தடையம் இல்லாமலே புரிந்து கொண்டு, திரும்பிப் பார்த்தான்.

அந்த பாசனத்தில், 'மூணு மரக்கால்' தவிர, அதாவது இவனுடைய இந்தச் சுண்டைக்காய் நிலத்தை தவிர்த்த பூசணிக்காய் பகுதிக்கு ஏகபோக உரிமையாளரான வீராசாமி, மோதிரக் கையை நீட்டிக் கொண்டே வந்தார். வயதைக் கருதியும், வசதியைக் கருதியும், வினைதீர்த்தான் எழுந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/86&oldid=1384273" இலிருந்து மீள்விக்கப்பட்டது