பக்கம்:காகித உறவு.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

95


வீராசாமி நல்ல மனிதர், ஆகையால் அவர் எதுவும் பேசவில்லை. அவரது கையாட்கள், காலாட்கள் வந்தார்கள். வினை தீர்த்தானின் வயலை மிதித்துக் கொண்டே வந்தார்கள். "மூட்டம் போட்டால் பெருச்சாளி தானாவரும்” என்பது போல், திக்குமூட்டிய வினைதீர்த்தான், திட்டியே தீருவான் என்பதை எதிர்பார்த்தவர்கள்போல், கர்மயோகிகள் போல் வந்தார்கள். இருவர், வினைதீர்த்தானின் கைகளையும், கால்கைளையும் பிடித்துக் கொள்ள, எஞ்சிய மூன்று வீரர்கள், அவனை எட்டி உதைத்தார்கள் மண் வெட்டிக் கணையால் வாயில் குத்தினார்கள். வயிற்றில் இடித்தார்கள். அடித்தகளைப்போடு, முதுகை நிமிர்த்திக் கொண்டு, அவர்கள் இளைப்பாறப் போனபோது, வினைதீர்த்தான் வயலில் சுருண்டு கிடந்தான் வாயில் பொங்கிய ரத்தம், வயலை நனைத்தது. வயிற்றில் துளிர்த்த ரத்தத் துளிகள், நெற்பயிரில் பட்டன.

வினைதீர்த்தான் ஓடினான். வயலில் இருந்து வீட்டுக்கு வராமலே ஒடினான். அருகேயுள்ள சட்டாம்பட்டிக்கு ஒடினான். அங்கே வல்லமை பொருந்திய 'சண்டியர் மிராசுதாரும் வீராசாமியை எப்படிக் கையைக் காலை ஒடிக்கலாம் என்று குறிபார்த்து இருப்பவருமான ராஜதுரையிடம், மூச்சிரைக்க போய் நின்றான்.

"கும்பிடுறேன் அய்யா..."

"என்ன விஷயம் வினைதீர்த்தான்."

"என் மூணு மரக்கால் விதப்பாட்ட நீங்க எடுத்துக்கணும்:

"பணம் இல்லியே."

"எவ்வளவு வேணுமுன்னாலும் தாங்க..."

"எந்தப் பக்கமா இருக்கு”

"ஒங்க... மருமகன சந்தையிலே. ஆள் வச்சி அடிச்சாரு பாருங்க. வீராசாமி. அவரு வயலுக்குப் பக்கத்துல. பொது வரப்பு. பொதுப் பாசனம்..."

"அப்படின்னா... வாங்கிக்கிறேன். இந்த மூணு மரக்கால் விதப்பாட்ட வச்சி. அவன் மூணு கோட்டயயும். பொட்டல் காடாக்கப் போறேன். பாரு... மரக்கால் ஆயிரம் ரூபாய்தான் சரியா...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/97&oldid=1383480" இலிருந்து மீள்விக்கப்பட்டது