பக்கம்:காக்கை விடு தூது.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



யானும் ஒருதமிழன் என்றுரைத் தெங்கட்டுத்
தேனேய் மொழிபகர்ந்து தித்திக்கத்-தான்வந்து
பேசு பெரியீர் பெரும்பதவி பெற்றதனால்
ஆசை மறைக்க அறிவழிந்தீர்-நாசமுறு
சாதி யுரங்கொள் தகையுடையீர் இந்நான்கும்
பேதம் அறியாத் தமிழன்பை-ஓதுலகில்
குட்டிக் கதையாய்க் குறைத்துப் பழந்தமிழைக்
குட்டிச் சுவராக்கிக் கூறிட்டு-வெட்ட
வெளியாய் விளக்கிடுநல் வீரரே நுந்தம்
ஒளியா வுளத்தை யுணர்ந்தோம் - தெளிவிலீர்
உம்மவர்கள் வாழவுளத் துன்னினீ ராயினுடன்
எம்மவர்கள் வாழ இடமுரைமின்-உம்மையே
நூலால் உலகம் நொடியில் அழியுமென
மேலோர் உரைத்த விதியறிவோம்-மால்கொண்டே
இந்தியெனுந் தீயாள் இன்பத் தினைவிழைந்து
செந்தமிழ்த் தாயின் திருவுடற்குத்-தந்திரத்தால்,
தீங்கிழைத்துச் செந்தமிழர் தம்பகையைத் தேடாது
தேங்கா தவரைச் சிறையகற்றி-ஓங்குபெரும்
அச்சமீக் கூர்ந்தெம் அருந்தமிழர்ப் போற்றியே
மெச்சு மவர்முன் விரைந்தடைந்து-கைச்ச
மொழி யுரைத்த தீப்பிழைக்கு மும்மடங்கு வேண்டி
அழியா வுளத்தன்பு பெற்றுப்-பழிபோக்கி
உங்குலத்தார்ப் போற்றி ஒளிர்சென்னை மாநகரில்
தங்கு முதலமைச்ச ராயமர்ந்-தெங்கும்
வசைநீங்கி யாரும் வழுத்து மரபால்
இசைபரப்பி வாழுமின் இன்றேல்-நசையினால்
உள்ளத் துயர்தமிழர் உண்மைவழிப் போரியற்ற
ஒல்லையிற் கைதாரும் என்றுரைத்துச்-செல்லவே
வெண்கோழி யென்னை விடுத்ததுகாண் என்றுரைத்து
வண்போர்க்குக் கைவழங்கி வா.

(க.வெ)

இந்திமொழியின் கட்டாயம் ஒழிக.