எங்கும் நிறைவோம்
நடைபெற்ற பொதுத் தேர்தலில் சட்டமன்றத்துக்கு 50 பேரும், பாராளு மன்றத்துக்கு 7 பேர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதற்குக் காரணம், கழகத்தவர்கள் கொண்ட கொள்கையை காப்பாற்றக்கூடியவர்கள் என்று மக்கள் கருதியதேயாகும்.
கொண்ட கொள்கையில் உறுதிபடைத்தவர்கள் என்பதற்காகத்தான் நமது கழகத்து 34 இலட்சம் மக்கள் வாக்களித்து, 50 பேர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்; அதே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும் 7 பேர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்—இது, நம் கழகத்தின் வெற்றிச் சின்னத்தின் அறிகுறி.
கழகத்தவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியுள்ளவர்கள். ஆட்சியின் அலங்கோலங்களை அலசிக் காட்டக் கூடியவர்கள்; நிர்வாக ஊழல்களை அம்பலப்படுத்திக் கண்டிப்பவர்கள் என்பதையெல்லாம் எண்ணித் தான், நமக்கு, இத்தேர்தலில், பெருவாரியான ஆதரவை, நாட்டு மக்கள் தந்திருக்கிறார்கள்.
இப்படிப் பெருமைப்படத் தக்க அளவுக்கு நாம் வெற்றி பெற்றுள்ள போதிலும், சில தோல்விகளைச் சந்திக்கவேண்டியவர்களானோம். நமக்கு ஏற்பட்ட இந்த தோல்விகளைப் பற்றி கவலைப்பட முடியாத நிலையில் — கவலைப்பட அவசியமில்லாத வகையில் நாம் இருக்கிறோம்.
திட்டமிட்ட சதி
காஞ்சி சட்ட சபைத் தொகுதியிலும், மற்றும் நம் கழகத்தவர்கள் கைப்பற்றி இருந்த சட்டசபைத் தொகுதிகளிலும் நம்மைத் தோற்கடிக்க வேண்டுமென்பது காங்கிரசுக்காரர்களின் நீண்டகால எண்ணமாகும்.