பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi



தாம் பிறந்த குலம் வடகலையாக இருந்தாலும், வடகலை தென்கலை வேற்றுமை பாராது இராமநுசர் வைணவத்தை உள்ளத்தில் பதித்து வாழ்பவர். என் நெடுநாளைய நண்பர் டாக்டர். V.K.S.N. இராகவன்; சென்னைப் பல்கலைக்கழக வைணவத்துறையில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி வருபவர். 'விசிட்டாத்வைத இலக்கிய வரலாறு' என்ற இவர் தம் (பிஎச்.டி. பட்டத்திற்குரியது) ஆங்கில நூல் மிகு புகழ் பெற்றது. இது தவிர பல அரிய வைணவ ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வரைந்தவை - வைணவ அறிஞர்களின் பாராட்டுதலைப் பெற்றவை. இத்தகைய உழுவலன்பர் இந்த நூலுக்கு அணிந்துரை அளித்தது இந்நூலின் பேறு; என் பேறுங்கூட. அணிந்துரை அருளிய அன்பருக்கு என் இதயங் கனிந்த நன்றி என்றும் உரியது.

இந்த நூலின் கைப்படியைத் தமிழ்ப் பணியே தெய்வப்பணி என்ற குறிக்கோளை முன் வைத்துப் பணியாற்றிவரும் அவ்வை பதிப்பகம் அன்புடன் ஏற்று அச்சு வடிவம் பெறச் செய்து அம்பலத்திற்குக் கொணர்ந்து தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் நடமாட விட்ட பதிப்பக உரிமையாளர் இறையுணர்வு மிக்க திருமதி. தேவகி ராமலிங்கம் அவர்கட்கு என் அன்பு கலந்த நன்றி என்றும் நிலையானது.

இந்நூல் அச்சாகும்போது மூலப்படியுடன் பார்வைப் படிகளை ஒப்பிட்டுத் திருத்தம் செய்து உதவிய என் அபிமான புத்திரி டாக்டர். மு.ப. சியாமளாவுக்கு என் ஆசி கலந்த நிலையான நன்றி என்றும் உரியது.

ஆசாரியப் பெருந்தகையின் திருவருள் வியக்கும் வண்ணம் அவர்தம் அன்புச் சீடராகிய அடியேன் பக்தியுடன் வரைந்த நூலை அண்ணாசாமியை உள்ளத்தில் பதித்த வண்ணம் அவர்தம் புகழ் பரப்பி வரும் ஆர்வலர் அனைவர்க்கும் பக்தி கலந்த அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன்.