பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




1.தோரணவாயில்



ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்

(திருவாய் 3.3:1)

ஒரு காலத்தில் மன்னர்குல பரம்பரை பற்றிய வரலாறே நாட்டு வரலாறு என்று கருதப் பெற்றது. நாடு விடுதலை பெறுவதற்குமுன் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் வரலாறு படித்த மாணவர்கள் மன்னர் பரம்பரை வரலாறு படித்து வந்ததை நினைவு கூரலாம். நாளடைவில் மனித மனம் விரிந்தது. மனித நாகரிகம் வளர்ந்த வரலாற்றைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. பல்வேறு துறைகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியதன் விளைவாக தன்- வரலாறு, வாழ்க்கை வரலாறு, இலக்கிய வரலாறு, மொழிவரலாறு, அறிவியல் வரலாறு என்ற துறைகளிலெல்லாம் வரலாறுகள் தோன்றத் தொடங்கி வளர்ந்து வருகின்றன.

பக்தி இலக்கிய காலம் முகிழ்க்கின்றது. சைவ சமயக் குரவலர்கள் இறையருளால் அருளிச் செயல்கள் பாடுகின்றனர். ஆழ்வார்களின் பாசுரங்கள் அருளிச் செயல்களாகத் தோற்றமாகின்றன. மக்கள் அவற்றில் உள்ளத்தைப் பறிகொடுத்துப் பாடி மகிழ்கின்றனர். வைணவ ஆசாரியர்கள் தோன்றுகின்றனர். மணிப்பிரவாள நடையில் வியாக்கியானங்கள் வரையப்பெறுகின்றன; சாத்திரங்களும் தத்துவ நூல்களும் தோன்றுகின்றன.