பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் அகப்பொருள். தத்துவமாக விரிகின்றது. இந்த உறவே ஏனைய எல்லாவற்றிலும் சிறந்தது; உயிராயது. இந்த முறையில் பரமான்மாவைத் தலைவனாகவும் சீவான்மாவைத் தலைவியாகவும் வைத்து விளக்கும் பாசுரங்கள் எழுகின்றன. இம் முறையை ஆசாரிய ஹிருதயம் ஞானத்தில் தம்பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு (118) என்று குறிப்பிடும். அதாவது ஞான நிலையில் இருக்கும் போது - தாமான நிலையில் பேசும் பாசுரங்களாக இருக்கும். பிரேம நிலையில் இருக்கும்போது பெண் தன்மையை அடைந்து வேற்று வாயாலே பேசும் பாசுரங்களாக இருக்கும். இந்நிலையில் நம்மாழ்வார் பராங்குசர் என்ற பெயராலும் திருமங்கையாழ்வார் பரகாலர் என்ற பெயராலும் வழங்கப்பெறுவர். மரபுகள் - விளக்கம் : ஆழ்வார்கள் தாமான தன்மையை விட்டுப் பிராட்டியான பெண்பாவனையை ஏறிட்டுக் கொள்ளுதல் எதற்காக? என்ற வினா எழுகின்றது. ஆழ்வார்கள் பெண் தன்மையைத் தாமாக ஏறிட்டுக் கொள்ளுகின்றனரல்லர். இந்நிலை (அவஸ்தை) தானே பரவசமாக வந்து சேர்கின்றது. புருடோத்தமனாகிய எம்பெருமானின் பேராண்மைக்கு முன் உலகம் அடங்கலும் பெண்தன்மையாக இருத்தலாலும், சீவான்மாவுக்கு சுவாதந்திரிய நாற்றமேயின்றிப் பாரதந் திரியமே வடிவாயிருப்பதாலும் இவ்வகைகளுக்கேற்பப் பெண்பாவனை வந்தேறியன்றோ என்று கொள்ளுதல் வேண்டும். எனவே, ஆழ்வார்கள் குறிப்பாக நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் பெண் தன்மை எய்திப் பல திருக்கோயில் எம்பெருமான்களைப் பக்திப் பரவசத்தால் பாடி அநுபவித்ததை அவரவர்களுடைய திருப்பாசுரங்களில் கண்டு மகிழலாம்.