பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

காஞ்சி வாழ்க்கை


காலம் விரைந்து செல்லுகிறது. ‘செல்லுகிறது’ என்று முடிப்பதற்குள் அந்த நிலை இறந்தகாலமாகி விடுகிறது. இவ்வளவு விரைந்து செல்லும் காலச் சூழலுக்கிடையில் கடந்த காலத்தை நினைப்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்கையாகவே அமைகின்றது. பல்வேறு நிகழ்ச்சிகள் துக்கம் தோய்ந்தவையாக இருந்தாலும், மனிதன் அதனுள்ளேயே மூழ்கி இருந்து தன் காலத்தையெல்லாம் வீணாக்காது, சிறிது சிறிதாகத் தெளிவு பெற்று, சமுகத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு எப்படி எப்படி மாறிவாழக் கற்றுக்கொண்டான் என்பதையும் இந்த நினைவால் உணரமுடிகின்றது. ஒவ்வொரு சாதாரண மனிதனும்–கல்லாதவனும்கூட–அவனுடைய கடந்தகால நிகழ்ச்சிகளை எண்ணிச் செயலாற்றுவனாயன் நிச்சயமாக அச் செயல்கள் தெளிவு பெற்றனவாக இருக்கும் என்பது உண்மையாகும். எனவே மற்றவர்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, இந்நூல் என்னைப் பொறுத்தவரையில் என் உளத்துக்குத் தெளிவுவூட்டி, உணர்வை நல்வழியில் திருத்தி, உலகில் உலவ வழிகாட்டியாக அமையும் என எண்ணுகிறேன்.

என் நூல்கள் விற்பனை வருவாய் அனைத்தும் வள்ளியம்மாள் கல்வி அறத்துக்கே என உரிமைப்படுத்தி நின்ற நெறியில் இந்நூலும் ‘வள்ளியம்மாள் கல்வி அறத்’துக்கெனவே வெளிவருகிறது. தமிழ் உலகம் இந்நூலை நலமிருப்பின் ஏற்றுப் புரக்க வேண்டுகிறேன். இந்நூல் வெளிவரக் காரணமாயிருந்த அனைவருக்கும் நன்றியுடையேன்.


‘தமிழ்க்கலை இல்லம்’
சென்னை -30.
1-9-'80.

பணிவுள்ள,
அ. மு. பரமசிவானந்தம்.