பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிவுரை

141


 நினைவுகள் உதகை மலை உச்சியில் இருந்து எழுதினேன் என்பதை அந்த நூலிலே குறித்துள்ளேன். அப்படியே 'கவிதையும் வாழ்க்கையும்' போன்ற வேறு சில நூல்களையும் அங்கிருந்தே எழுதினேன். '19ம் நூற்றாண்டின் தமிழ் உரை நடையும்'. வேறு சில நூல்களும் கோடைக்கானல் மலை உச்சியிலும் அதைச் சார்ந்த சண்பகனூரிலும் எழுதப்பெற்றவை. 'சமுதாயம் பண்பாடும்' ஈரோடு நகரை அடுத்த பெருந்துறை மருந்தகத்து விருந்தினர் விடுதியில் எழுதப்பெற்றது. சில கட்டுரைகள் குற்றாலத்தில் எழுதப் பெற்றன. அப்படியே இந்த நூலையும் ஏர்க்காட்டு மலையில் எழுதி முடித்தேன்.

இந்த நூல் எழுதி இன்றுப் பத்து ஆண்டுகளிக்குமேல் கழிந்து விட்டன. இதை எழுதின உடனே பதிப்பித்திருக்கலாம். இதற்குப் பிறகு எழுதிய என் நூல்கள் சிலவும் வெளிவந்து விட்டன. ஏனே இதுமட்டும் பத்து ஆண்டுகள் கழித்து வெளிவருகின்றது. இதற்கு என்ன காரணம் என்று என்னாலேயே சொல்லமுடியாது. இப்போதாவது இது வெளிவந்தமை குறித்து நான் மகிழ்கின்றேன்.

இந்நூல் எழுதியபோது எனக்கு வயது ஐம்பத்தைந்து --ஓய்வுபெற வேண்டிய காலம். ஒய்வுபெற்ற பின் நிறையப் படிக்கலாம் அல்லது எழுதலாம் என்று எண்ணிய நேரங்கள் உள. எனினும் நான் ஒய்வு பெறுவதன் முன்பே என் அன்னையின் நினைவாக 'வள்ளியம்மாள் கல்வி அறத்' தினைத் தொடங்கினேன். 1968ல் 5 பிள்ளைகளுடனும் மூன்று ஆசிரியர்களுடனும் தொடங்கிய பள்ளி தற்போது 1600 பிள்ளைகளையும் 65 ஆசிரியர்களையும் கொண்டு வளர்ந்துள்ளது. பள்ளியின் முதல்வரின் தளரா முயற்சியாலும் ஆசிரியர்தம் உழைப்பினாலும் பெற்றோர்தம் ஒத்துழைப்பாலும் இப்பள்ளி இக் குறுகிய காலத்தில் நன்கு வளர்ந்ததோடு நல்ல தரத்தினையும் நிலைநாட்டியுள்ளது. நான் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.