பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை நகரில்

29


—இக்கால மூன்று பைசா) பொட்டலமாக எடுத்துக் கொள்வோம். மாலையில் திரும்பும்போதும் ஏதேனும் ஒரு அணாவுக்குச் சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும். இவ்வாறு பத்து அல்லது பன்னிரண்டு ரூபாய் அளவில் ஒவ்வொரு திங்களும் இனிமையாகக் கழியும்.

பல்கலைக்கழகத்திலும் நல்ல விடுதியுண்டு. இலவச அறையில் தங்கிக்கொண்டால் இதே செலவில் நன்கு இருக்க வாய்ப்பு உண்டு. எனினும் நான் மடத்தில் உள்ள அடிகளாரின் மேற்பார்வையிலேயே இருக்க விரும்பியதாலும் நாள்தோறும் தில்லைப் பெருமானைக் கண்டு மகிழ விரும்பியதாலும் நடையையும் பொருட்படுத்தாது சிதம்பரத்திலேயே தங்கினேன். அப்போது மடத்து அடிகளாரின் இளவல் திரு. முருகேச முதலியார் என்பவர் வித்துவான் இறுதி வகுப்பில் பயின்றுகொண்டிருந்தார். அவருடன் சென்றுவர வசதியாக இருந்தது; மேலும் அவர் எனக்கு வேண்டிய பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார். நூல்களில் சிலவும் மடத்து அடிகளார் தம் நூல் நிலையத்தில் இருந்து தந்து உதவினார்கள். மடத்து அடிகளாகிய அருட்டிரு சபாபதி சுவாமிகளும், அவருக்கு அண்ணலாரும் மடத்து நிர்வாகத்தைத் கவனித்துக்கொண்டு வந்தவருமான திரு. கோவிந்த சாமி அவர்களும் என் நலத்தில் அக்கறைகாட்டி ஆதரித்தனர். எனது வளர்ச்சியில் அவர்களுக்கெல்லாம் பங்கு உண்டு. அவர்கள் எங்கிருப்பினும் என்னால் அவர்கள் வணங்குதற்குரியர்.

அந்த மௌனசுவாமிகள் மடம் நன்கு பயின்ற துறவிகள் வாழும் மடமாக விளங்கிற்று. அடிக்கடி பல துறவியர் வந்து தங்கிச் சென்றனர். அங்கேயே ‘வெள்ளை வேட்டிச் சாமி’ என்று ஒருவர் இருந்தார். அவர் தமிழ் இலக்கண இலக்கியத்தில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். நாள்தோறும் மாலைவேளைகளில் என்னை உட்காரவைத்து, நான் படித்த பாடங்களைப் பற்றிக் கேட்பார். குத்துவிளக்கே முன்னே எரியும். அதில் சிலவற்றை படிக்கச் சொல்லுவார்.