பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

காஞ்சி வாழ்க்கை


பதவியில் இருந்தகாலை என்னிடம் மாறுபட்டு எனக்கு ஓர் தீங்கிழைத்தார் எனப் பிறர் எண்ணுமாறு ஒரு காரியம் செய்தார். ஆனால் என் வரையில் அவர் செய்த அந்தச் செயல் எனக்கு நன்மையாகவே முடித்தது. அவர் மட்டும் அன்று அதைச் செய்யாதிருந்திருப்பாரானால் இன்று என் மக்கள் வாழும் நல்வாழ்வினை எல்லாம் நான் காணமுடியாது. அவர்கள் எந்தெந்த நிலையிலோ சென்றிருப்பார்கள்—நானும் எப்படி இருந்திருப்பேன் என்று சொல்லமுடியாது. ஆகவே அவரிடம் நான் மாறுபட்டது இல்லை. மாறாக அதற்குப் பிறகு அவரைப் பாராட்டிப் போற்றியே வருகிறேன். இவை பற்றிப் பின் சென்னை வாழ்வைப் பற்றி எழுதும் போது விளக்கமாக எழுதுவேன்.

அரசியல் அலை வீசுவது பற்றியன்றோ பார்த்துக் கொண்டு வந்தோம். இடையில் திருநாவுக்கரசர் நம்மை வேறு எங்கோ ஈர்த்துச் சென்றார். சென்னை சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்று அமைச்சர் அவை அமைந்த பிறகு நாட்டின் மாவட்டக் கழகங்கள் நகராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்தத் தொடங்கினர். அந்த அரசியல் சூழலில் சிக்கிய நானும் செங்கற்பட்டு மாவட்டத் தேர்தலில் போட்டியிட நினைத்தேன். எனினும் அவ்வளவு தீவிரமாக வேலைசெய்யவில்லை. எனது பள்ளியின் தலைவரோ, அரசாங்கம் தடுத்தாலும் நான் நிற்பதற்கு இசைவு தருவதாகக் கூறினார். அவருக்கு மேலுள்ள ஆங்கில நாட்டுச் செயலாளரும் இசைவும் வாழ்த்தும் தந்தார். என்னிடம் பயின்ற என் மாணவர் கூட்டம் அப்படியே ஊர் ஊராகப் புடை எடுக்கத் தயாராகக் காத்து நின்றது. இத்தனைக்கும் இடையில் நான் தேர்தலில் நிற்க முடிவு செய்தாலும், நான் அதுவரை சார்பு பற்றி இருந்த காங்கிரஸ் அடிப்படையிலேயே நிற்க நினைந்தேன். எனவே அதற்கென விண்ணப்பம் செய்தேன்; ஆனால் நான் இந்தி எதிர்ப்பில் பங்கு கொண்ட காரணத்தால் மறுக்கப்பெற்றது. எனவே நான்