பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

காட்டு வழிதனிலே

உடனே புரிந்துகொள்ள முயலவேண்டும். உலகிலுள்ள மக்கள் அனைவரும் அதை நன்கு அறியுமாறு செய்யவேண்டும். அதில்தான் நமது கதிமோட்சம் உள்ளது.

இந்தியா உலகிற்கு வழிகாட்ட வேண்டுமானால் மற்ற நாட்டு அரசியல் நெறியையே பின்பற்ற முயலாமல் காந்தியத்தின் அடிப்படையில் புதிய நெறி வகுத்துக் கொள்ளவேண்டும். தொடக்கத்திலேயே நாம் நம் போக்கைச் சரியான பாதையில் செலுத்தாவிடில் பிறகு மற்ற நாடுகளைப் போல இப்புறமும் அப்புறமும் திரும்ப வகையறியாது திணற வேண்டியதாகும்.

இந்தியாவின் தந்தையெனக் காந்தியடிளைப் புகழ்வதோடு நின்றுவிடாமல் அவருக்குச் சிறந்த நன்றி செலுத்துவது நம் கடமையென உணர்ந்தோமாயின் நாம் முதலில் அவர் வழியில் நின்று உலகுக்கும் அதை எடுத்துக் காட்டி மானிட சாதியைச் சீர்பெறச் செய்யவேண்டும்.

உலகமெல்லாம் சேர்ந்து ஒரு நாடுபோல அரசாங்கமும், மற்ற காரியங்களும் நடைபெறும்படியான காலம் வரும்வரையில் மானிட சாதிக்கு நல்ல சுகம் கிடைக்காது. “உலக அரசாங்கம் நிச்சயம் வரும்; நிச்சயமாக வந்தாகவேண்டும். உலகத்தின் நோய்களுக்கு வேறு மருந்தே கிடையாது” என்று பண்டித நேரு கூறியிருப்பது பொருள் செறிந்த வாசகம். இன்றைய போக்கே நீடிக்குமானால் அது