பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

காட்டு வழிதனிலே


தந்ததற்காக நாம் அவரைப் பாரதத்தின் தந்தை என்று கொண்டாடுகிறோம். உலகத்தின் மற்றப் பாகங்களிலும் அலரைப் போற்றுவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவருடைய பெருமையை முற்றிலும் மக்கள் உணர்ந்து கொண்டதாகக் கூற முடியாது. அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் செல்ல வேண்டுமோ? ஆண்டுகள் மட்டும் சென்றால் போதாது போலிருக்கிறது. இன்னும் உலகம் எத்தனை துன்பங்களில் உழவ வேண்டுமோ? துன்பத்தில் உழன்று போராடுகின்ற போதுதான் நமக்குப் பெரியவர்களின் நல்லுரைகள் உறைகின்றன. அதுவரை அவை புலப்படுவதில்லை. நமது அறிவு அத்தனை மந்தம்; இல்லை, அறிவு மந்தமல்ல; நமக்கு அத்தனை உதாசீனம்.

மகாத்மா காந்தி உலகிற்கு வந்தது இந்தியாவின் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல என்பது எனது கருத்து. இந்திய விடுதலையும், அவர் பணிகளில் முக்கியமானது தான். ஆனால் அதைவிட ஒரு முக்கியமான பணிக்காக அவர் தோன்றினார் என்று நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

சென்ற ஐம்பது ஆண்டுகளுக்குள்ளேவிஞ்ஞானம் மிக விரிவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. மனிதன் பல அற்புதங்களைச் சாதித்திருக்கிறான். அவனுக்குத் தன் அறிவைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்வதற்குத் தகுதியுண்டு. ஆனால், அறிவு வளர்ந்ததற்கு சமமாக அவனுடைய அன்பு வளரவில்லை. மூளை பெருகிவிட்டது; ஆனால் நெஞ்சு விரியவில்லை.