பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதம் தேவையா?

73

கிறார்: “மதம் என்பதன் பொருள் என்ன ? அது உள்ளத்திலே நன்னெறியைப் பதிய வைப்பது; சுய நலம், பேராசை முதலியவற்றை எதிர்த்து நிற்கும் ஆற்றலைத் தருவது நடத்தையையும் நோக்கத்தையும் தூய்மைப் படுத்துவது; காமத்தை வெல்ல உதவுவது; உண்மை பேசுதல், நாணயமாக நடத்தல், கருணையோடு வாழுதல், பிறர் குற்றம் பொறுத்தல், சிறிய செய்கையிலும் மனச்சான்றின்படி நிற்றல் ஆகியவற்றைக் கடைப்பிடித்துத் துணிவுடனிருக்கச் செய்வது சொந்த வாழ்க்கையிலும், பிறர் கண் முன்பும், பிறர் காணாதவிடத்திலும், எப்பொழுதும் நன்னெறியையே சார்ந்து நிற்கச் செய்வது ; சீரிய கொள்கையைக் கைக்கொண்டு நடப்பதோடல்லாமல் என்றும் புத்துயிர் பெற்று வாழச் செய்வது இவற்றை யெல்லாம் கொண்டதே மதம்” என அவர் விரித்துரைக்கின்றார். ஆகவே, மதம் என்பது வாழ்க்கையைச் சீரிய முறையிலே நடத்துவதைப் போதிப்பதும், வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளை அடையச் செய்வதுமாகும். அதை வேண்டாமென மறுப்பது நல்வாழ்க்கையையே மறுப்பதாகும்.

“நல்வாழ்க்கை வாழ்வதற்கு நீதி நெறிகள் மட்டுமிருந்தால் போதுமே, மதம் எதற்கு?” என்று சிலர் கேட்கலாம். உலகத்தில் இன்பம் நிலவ வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் நன்னெறியில் ஒழுகவேண்டும் என்று எல்லோருக்கும் சிறு வயது முதற்கொண்டே அறிவூட்டிவிட்டால் நாம் விரும்புகின்ற பயன் கிடைத்துவிடும்; அதற்கு மதம் தேவையில்லையென அவர்கள் கருதலாம். தனிமனிதனுடைய