பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாலைப் பொழுதினிலே

83

தான் அது. இருந்தாலும் அந்தச் சந்தி வேளையிலே அதற்கு ஏதோ ஓர் அலாதியான இனிமை இருந்தது. வானவெளி எல்லாம் அந்த நாதத்தின் நிறைவு தான். புல் மேயும் ஆடுகளும் அதைத் துய்த்து மகிழ்ந்தன.

ஆட்டுக் குட்டிகளுக்கு ஒரே களியாட்டம், துள்ளித் துள்ளிக் கால்களைக் காற்றில் வீசி எழுந்து தாவியும் பாய்ந்தும் விளையாடின. "அடடா, இந்த உயிரினங்களெல்லாம் இப்படி மகிழ்ச்சியோடு வாழ, மனிதன் மட்டும் வாழத் தெரியாமல் சங்கடப்படுகிறானே?" என்று நினைத்தேன். அப்படி எண்ணியவாறே சிந்தனையில் ஆழ்ந்து நின்றுகொண்டிருந்தேன். ஆட்டிடையன் மெதுவாக அருகே வந்து, "சாமி, ஆட்டுக்குட்டிகளைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்களே?" என்று பேச்சுக் கொடுத்தான்.

நான் சட்டென்று அவன் பக்கம் திரும்பி, "ஆமாம், இந்த ஆட்டுக்குட்டிகளுக்காவது வாழத் தெரிகிறது. மனிதனுக்கு அதுகூட முடியவில்லையே என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்றேன்.

"ஆட்டுக் குட்டிக்கு என்ன சாமி தெரியும்? பாவம்! நானும் - ஐம்பது வருசமாக ஆடு மேய்க்கிறேன். இருபது தலைமுறைக்குமேலே ஆடுகளைப் பார்த்தாச்சு. ஒரு நரிக்குட்டியை எதிர்த்து நிக்க இதுகளுக்கு முடியலையே?" என்று வேடிக்கையாக அவன் சொன்னான்.