பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுபாணாற்றுப் படை

95



வருக்கு அழல் தரும் வேலையுடையாய் என்றும் சில மொழிகள் கூறுவதற்கு முன்பே, அவன் உனக்கு நல்ல ஆடையை அணிவிப்பான்; காண்டவ வனத்தை எரியூட்டின அருச்சுனனுக்கு முன்னவனான வீமசேனன் கண்ட மடை நூல் நெறியில் வழுவாது செய்த அடிசிலைப் பொற்கலத்திட்டு, விருப்பமொடு தானே நின்று உண்ணச் செய்வான்; அதன் பின் நிதியமும், அணிகலன்களும், தேரும், குதிரையும், பண்டியும், செலுத்தப் பாகனும் தந்து உன்னை அனுப்பி வைப்பான். அவனிடம் செல்க' என்று கூறி முடிக்கின்றான்.

பாணனுடைய உரையிலே ஓய்மாநாட்டு நல்லியக் கோடனின் வள்ளன்மை நிலைத்த புகழ் பெற்று விளங்குகிறது. மூவேந்தர்களது தலைநகர்களுக்குச் சென்றால் அங்கு கிடைக்கும் நிதியமும் வறிதென்று தோன்றும்படி, வள்ளல்கள் எழுவரின் கொடைத் தன்மையை அவன் ஒருவனே கொண்டிருப்பதாக அவன் கூறுகின்றான். மேலும் நல்லியக் கோடனே நின்று பாணருண்ணும்படி விரும்பிய உணவைத் தருவதாகக் கூறுவதிலிருந்து அவனுக்குப் புலவரிடத்துள்ள அன்பும் மரியாதையும் வெளியாகின்றன. “"நல்லியக் கோடன் செய்நன்றி அறிபவன்; சிற்றினம் சேராதவன்; இன்முகம் உடையவன்; இனியன்; அஞ்சினவர்களுக்கு அருள் செய்பவன்; வெஞ்சினம் இல்லாதவன்; பகைவர் படையிற் புகுந்து அதை உடைப்பவன்; தன் படை நிலைகுலைந்த காலத்து அதைத் தாங்குபவன்; கருதியது முடிப்பவன்; அறிவில்லாதார் மாட்டு அறியாமை பூண்டிருப்பவன்;”