பக்கம்:காணிக்கை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1

அன்று அவள் என்னைப் போக வேண்டாம் என்று சொன்னாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்காக ஒருத்தி கனவு காண்கிறாள் என்றால் அது ஆச்சரியம் தானே. என்னைப் பற்றிக் கனவு காண்பது வேறு; எனக்காகக் கனவு காண்பது வேறு என்பதை அன்று தான் அறிய முடிந்தது.

அன்று இரவெல்லாம் அவள் தூங்கவே இல்லை. அப்படி ஒன்றும் அவள் அன்று தேர்வுக்குப் படித்தாள் என்றும் கூற முடியாது. மாணவிதான்; ஆனால் அவள் கண் விழித்துப் படிப்பதைப் பழக்கமாகக் கொண்டது இல்லை. மணமாகி விட்டுக் கணவனை நினைத்துக் கொண்டு தூக்கம் வராமல் அப்படியும் இப்படியும் புரண்டுகொண்டு இருந்ததாகவும் கூற முடியாது. அவள் மணமாகாதவள் என்பதையும் முன்னமேயே சொல்லி விடுகிறேன். என்னைப் பற்றிக் கனவு காண்பதற்கு நான் அவள் கணவனும் அல்ல; அதனால் தான் அவள் எனக்காகக் கனவுகண்டாள். இதை அவள் மறுபடியும் சந்தித்த போது என்னிடம் சொன்னாள்.

“இது ஒரு புது அனுபவம். இப்படிக் கூட ஒரு பைத்தியக்காரி இருப்பேனா உங்களைப் பிரிந்து விட்டு. அப்புறம் நான் 36 இல் போய்விட்டேன்” என்றாள். அதாவது 36 வது எண்ணுள்ள பஸ்ஸில் என்னை விட்டுப் பிரிந்து விட்டாள். அதற்குப் பிறகு அவள் 27ஐப் பிடித்துத் தன்விடுதியைச் சேர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/6&oldid=1320632" இலிருந்து மீள்விக்கப்பட்டது