பக்கம்:காதலா கடமையா.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னலும்,
மக்கள் மகிழ்ந்தார் வரையறை யிலாது!
"தக்கது தக்கது தக்க" தென்றார் சிலர்;
ஒல்லென ஒலித்தனர் சில்லோர்;
பாடினர் சில்லோர் பழம்பெரு நாட்டினை!

ஒருவன் தன்உயிர் ஒப்பான் வாழும்
தெருநோக்கி ஓடிச் செப்பினான் மகிழ்ச்சியை!

மரத்தில் ஏறி மகிழ்ச்சியால் குதித்துச்
சிரித்தான் கால்வலி தெரியான் ஒருவன்.

இப்படி "ஒன் றுவை" என்றான் ஒரு சேய்;
அப்பாவை முத்தம் அளியா திருந்தாள்.
"நமக்கு விடுதலை நல்க அரசன்
வருகின்றானே தெரிவையே!" என்னலும்,
இருபது முத்தம் எண்ணா தளித்தாள்.

பல்லிலாக் கிழவி கல்லுரல் தன்னில்
மெல்லிலை காயினை மெல்ல இடிக்கையில்
விடுதலைச் செய்தி விளம்புதல் கேட்டதால்
தடதட என்றே இடிபட் டதுகல்.
எடுத்தவாய் கொழ கொழ என்னும்; அதன்பொருள்
அயலான் நம்மைப் படுத்தியபாடு
பறந்ததென்பதாம்.

கூரைவேய்ந் திருந்த கூலியாள் அங்கிருந்து-
ஆரையோ விரல்நொடித் தழைத்துப் "பார் இனி
ஒருபணத்துக் கொருகலம் அரிசி
தருவார்" என்று சாற்றி, முன்னிலும்
விரைவாய்த் தன்பணி ஆற்றினான்.
பெரியதோர் மகிழ்ச்சியைத் திருநாடு மணந்ததே.

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/21&oldid=1484389" இலிருந்து மீள்விக்கப்பட்டது