பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 157

அதில் தனக்கு அப்படியொன்றும் சம்பந்தமில்லை யென்றாலும் சந்தர்ப்ப விசேஷத்தை ஒட்டி, “ஏது?” என்று சொல்லிவைத்தார் ஆபத்சகாயம்.

இந்தச் சமயத்தில் உச்ச கட்டத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள் இருவரையும் உசுப்பிவிடுவதற்காக ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டே ஆபரேட்டர்’ உள்ளே நுழைந்தார். ஒருவருக்கு இருவராகத் தெரிந்த அவரைக் கண்டதும், “வாப்பா வா! நான் பிரான்சிலிருந்து கொண்டு வந்திருந்தேனே, அந்தப் படத்தைக் கொஞ்சம் போடு; ஐயா பார்க்கட்டும் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த பொத்தானை மறுபடியும் ஒர் அழுத்து அழுத்தினார் சுகானந்தம்.

அவ்வளவுதான்; அந்தக் ‘கடைசி மணி'யை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள்போல் கீதா உடனே வந்து அவருக்கு எதிர்த்தாற்போல் நின்றாள், அவருடைய கடைசி உத்தரவை எதிர்பார்த்து.

‘நீங்களும் எங்களுடன் சேர்ந்து படம் பார்க்க, வேண்டாமா? அழைத்து வா, அருணாவை’ என்றார் அவர், தன் கண்களில் ஒன்றை வழக்கம் போல் ஒர் அடி அடித்து.

‘சரிதான், இன்றையக் காதல் விருந்து அருணா போலிருக்கிறது’ என்று அனுபவப்பூர்வமாக நினைத்துக் கொண்டே அவள் வெளியே சென்றாள்.

அப்போது நகரத் தந்தை'யான மேயரும், நகரக் காவலரான கலெக்டரும் ஒருவர் பின் ஒருவராக வந்து உள்ளே நுழைய, “வாருங்கள், வாருங்கள்’ என்று அவர்களையும் வரவேற்று உட்கார வைத்துவிட்டு, ‘ஏ கிட்டா, கவனி!’ என்றார் சுகானந்தம்.

இதைச் சொல்லி அவர் வாய் மூடுவதற்குள், மேலும் இரண்டு ‘விஸ்கி புட்டிகளையும், அதற்கு வேண்டிய ‘பக்க வாத்தியங்களையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, அவன் ஒரு பக்கமாகப் போய் நின்றான், அடுத்த உத்தரவை எதிர்பார்த்து.