பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 203

துடைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதல்லவா அப்போதைய பிரச்னையாக இருந்திருக்கும், அவனுக்கு?’

‘அதையெல்லாம் அவர் ஏன் சார், கவனிக்கிறார்? அவருக்கு வேண்டியது சுந்தரைப் போன்ற சுகவாசிகள் நட்பு; அந்த நட்பின் மூலம் சுலபமாகப் பணம்; அந்தப் பணத்தை எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் குவிக்க வேண்டுமானால் உங்களைப் போன்றவர்களை அவர் ஒழித்துக் கட்ட வேண்டும்; அப்படி ஒழித்துக் கட்டும்போது, அவரை இன்னார் என்று நீங்கள் அடையாளம் கண்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்பது அவருடைய கவலை!-அதைத்தான் அவர் கவனிக்க முடியுமே தவிர, மற்றவற்றையெல்லாம் அவர் கவனிக்க முடியுமா?”

‘கவனிக்க முடியாதுதான்! நீ போ, நான் வருகிறேன் அவரைக் கவனிக்க!’

மணி கருவிக்கொண்டே, மறுபடியும் சைக்கிளின்மேல் ஏறினான். வேடிக்கையான உலகத்திலே இவர் ஒரு வேடிக்கையான சார்!’ என்று வழக்கம்போல் சிரித்துக் கொண்டே சங்கர் அவனைத் தொடர்ந்தான்-ஆம், அவர்கள் இருவரும் வெவ்வேறு இடத்தை நோக்கிச் சென்றாலும், அவற்றை அடைவதற்காக அவர்கள் சென்ற திசை ஒரே திசையாயிருந்தது!

‘சங்கர்!-எவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டான், மோகனின் அப்பாவைப் போய்ப் பார்க்கும்படி! என்னைப் போன்றவர்கள் அவரைப் போய்ப் பார்ப்பதென்பதுதான் அவ்வளவு சுலபமா? அவருடன் பேசுவதென்பதுதான் அவ்வளவு சுலபமா?

அவருடைய மகன் எனக்கு நண்பனாயிருக்கலாம்; அதற்காக அவரும் எனக்கு நண்பராயிருக்க முடியுமா? இருந்தால், அவர் தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்தஸ்து, அவரைப் பொறுத்தவரையில் கூட இல்லாமலல்லவா போய்விடும்?