பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 217

“ஆமாம். அத்துடன் நிற்கவில்லை; அந்தத் தொழிலில் தானும் கலந்துகொள்வதாகச் சொல்லி, இவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்; ஊக்கப்படுத்துகிறார். பாழும் பணம் இன்னும் கொஞ்ச நாட்களில் இவரைப் பைத்தியமாகவே ஆக்கிவிடும் போலிருக்கிறது” என்றான் மணி, அவர் தன்னைப்பற்றி என்ன நினைத்தாலும் நினைக்கட்டும் என்று துணிந்து.

ஆபத்சகாயம் வாய் விட்டுச் சிரித்தார்; மனம் விட்டுச் சொன்னார்:

‘உங்கள் வயதில் நானும் உங்களைப் போல் பேசிக்கொண்டிருந்தவன்தான் வயது ஆக ஆகத்தான் அந்த நாளில் அப்படிப் பேசிக்கொண்டிருந்ததெல்லாம் அபத்தம் என்றுத் தோன்றுகிறது எனக்கு. ஏனெனில் இந்த உலகத்தில் பணம் இல்லாமல் எதையுமே அடைய முடிவதில்லை; அப்படியே அடைந்தாலும் அதை நிரந்தரமாக அனுபவிக்க முடிவதில்லை. இதற்கு உதாரணம் ஒன்றல்ல, இரண்டல்ல; எத்தனையோக் காட்ட முடியும் என்னால். அதனால்தான் சொல்கிறேன். உங்கள் பெற்றோர் உங்களை நேசிக்க வேண்டுமா? முதலில் பணத்தைத் திரட்டுங்கள்; உங்கள் சகோதரர்கள் உங்கள் மேல் பாசம் கொள்ள வேண்டுமா? முதலில் பணத்தைத் திரட்டுங்கள்; உங்கள் மனைவி உங்களைக் கண்டதும் புன்னகை பூக்க வேண்டுமா? முதலில் பணத்தைத் திரட்டுங்கள்; உங்கள் சமூகம் உங்களை மதிக்க வேண்டுமா? முதலில் பணத்தைத் திரட்டுங்கள்; உங்கள் அரசாங்கம் உங்களை ஒருப் பொருட்டாக நினைக்க வேண்டுமா? முதலில் பணத்தைத் திரட்டுங்கள் அதை இன்று நீங்கள் பொருட்படுத்தாவிட்டால், அதை இன்று நீங்கள் போற்றிப் புகழாவிட்டால், நாளை அது உங்களைப் பொருட்படுத்தாது; நாளை அது உங்களைப் போற்றிப் புகழாது!”