பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. மரண சாசனம்

சிங்கர் சொன்னது உண்மை!-பெரும்பாலும் தனிமையையே விரும்பிய மணி, சற்றே குழப்பம் ஏற்பட்டாலும் கடற்கரைக்குச் சென்றுவிடுவது வழக்கம். அன்றோ, அவனைப் பொறுத்தவரை குழப்பத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆகவே, பதட்ட நிலை கொஞ்சம் தணிந்ததும் அவன் கடற்கரையை நோக்கி நடையைக் கட்டிவிட்டான்!

அதே கடல், அதே அலை, அதே ஒலி... அதே வானம், அதே பிறை, அதே நட்சத்திரக் கூட்டங்கள்...

உலகம் எங்கே மாறியிருக்கிறது, அது அப்படியேதான் இருக்கிறது!

இந்த அன்னபூரணியம்மாள்-யார் மாறினாலும் இவர்கள் மாறமாட்டார்கள் என்றுதான் இத்தனை நாளும் நான் எண்ணிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது அவர்களும் அல்லவா மாறிவிட்டார்கள்

நான் கேட்டது, ‘மோகன் இல்லையா வீட்டில்?’ என்பது; அதற்கு அவர்கள் நேரிடையாகப் பதில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்லியிருக்கவேண்டும்?'இருக்கிறான், இல்லை என்று இரண்டில் ஒன்றுதானே சொல்லியிருக்க வேண்டும்? அப்படிச் சொல்லவில்லை அவர்கள்-அவன் விந்ததும் ஒட்டலுக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்கிறார்களாம்!

அத்துடனாவது நின்றார்களா?-அதுவும் இல்லை; நான் ‘வருகிறேன்!” என்று சொல்வதற்கு முன்னாலேயே, நீ போ!’ என்று வேறு அவர்கள் என்னை வழியனுப்ப வருகிறார்கள்! இதிலிருந்தே தெரியவில்லையா, அவனை உள்ளே வைத்துக்கொண்டே அவர்கள் ‘இல்லை’ என்று சொல்கிறார்கள் என்று?