பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 247

உதவியாய்த்தானே இருக்கிறது? அதே மாதிரி நானும் இருப்பேன்; என்னில் ஒருவனாயிருக்கும் என் ஆன்மா என்னை விட்டுப் பிரியும் வரை, அதே மாதிரி நானும் இருப்பேன்!

ஆனால் நீ? உன்னால் அப்படி இருக்க முடியாது; உன்னில் ஒருவன் உன்னை விட்டுப் பிரிந்த பிறகு, உன்னால் அப்படி இருக்கவே முடியாது-வா, வந்துவிடு! உன்னில் ஒருவன் எங்கே போய்ச் சேர்ந்தானோ, அங்கேயே நீயும் போய்ச் சேர்ந்துவிடு வா, வந்துவிடு:

இவ்வாறு சொல்லிக்கொண்டே சென்று அவன் அந்தச் செருப்பை எடுக்கப் போனபோது...

நாலைந்து புத்தகங்கள்; அதற்கு நடுவே தலை நீட்டிக் கொண்டிருந்தது ஒரு நீண்ட கடிதம்:

இவற்றை யார் இங்கே வைத்துவிட்டுப் போயிருப் பார்கள் - சுற்றுமுற்றும் பார்த்தான் அவன்; கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லை-பொன்னா, பொருளா, எடுத்துத்தான் பார்ப்போமே?

இப்படி நினைத்து அவற்றை எடுத்துப் பார்த்தான்; எல்லாம் பாடப்புத்தகங்கள்-எந்த மாணவனாவது இவற்றை இங்கே மறந்து வைத்துவிட்டுப் போயிருப்பானோ?அப்படியிருந்தால் இந்தக் கடிதம் ஏன் இவற்றுக்கு நடுவே தலையை நீட்டிக்கொண்டிருக்கிறது?

கடிதத்தை எடுத்துப் பார்த்தான்; இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. வெளிச்சத்துக்கு வந்தான்; முத்துக் கோர்த்தாற்போல் அதில் எழுதியிருந்ததாவது:

அன்பு அப்படி என்று ஒன்று உங்களுக்கும் எனக்கும் இடையே இருந்தால், அந்த அன்புள்ள அப்பாவுக்கு! இறுதி வணக்கம்...