பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கூடச் சந்தேகம் கிடையாது என்னைப் பத்தி. நான் போக்கிரியே தவிர, பொம்பளைங்க விஷயமா, எனக்குக் கெட்ட பேர் கிடையாது அதனாலே, அவருக்கு என்னிடம் சந்தேகம் கிடையாது. பொன்னியோட எண்ணம், என்னான்னு என்னாலே தெரிஞ்சிக்க முடியவில்லை, ரொம்ப நாளா... நான் பொன்னியை விழுங்கி விடுவதுபோலப் பார்ப்பேன்...அது ஓரக்கண்ணாலே பார்க்கும்... நான் உங்க அப்பாரு எங்கேன்னு கேட்பேன் — என் குரல் கொஞ்சம் நடுங்கும் — அது கணீர்னு பதில் சொல்லும், வயக்காடு போனாரு, சேட் கடை போனாருன்னு—பொன்னி! பொன்னி! ன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டு, நானே சந்தோஷப்பட்டுக் கொள்வேன், பொன்னியை எப்படியும் அடைந்தாகணும்னு முடிவு கட்டிவிட்டேன். ஆனா அவளோட சம்மதம் கிடைச்சாகணும்னு வேறே எண்ணம். பல சமயம், முயற்சிக்கலாம்னு கிளம்புவேன். பிறகு, பயம்—இன்னொரு சமயம் பார்த்துக் கொள்லோம்னு இருந்து விடுவேன்...

தங்:— ஆமாம்... நீதான் முரடனாச்சே... பொன்னி விஷயத்திலே மட்டும், ஏன், அவ்வளவு பயம் உனக்கு...

பொ:— அதுதான் எனக்கு முதலிலே புரியலே. பிறகு புரிஞ்சுது. எனக்கு பொன்னிமேலே உண்மையான அன்பு ஏற்பட்டு வளர்ந்து வந்தது. சமயத்தை எதிர் பார்த்திருந்தேன. ஒருநாள், தாண்டவராயர் வீட்டுக்குப் போனேன்...

காட்சி—25

(பழைய சம்பவம்—தாண்டவராயன் வீடு)

பொ:— யாரு வீட்லே? தாண்டவராய மொதலி, ஐய்யோய், தாண்டவராய மொதலீ!

(உட்பக்கமிருந்து பொன்னி வருகிறாள். ஒரு விநாடி, அவனைப் பொன்னன் பார்க்கிறான். அவள் கூச்சமடைகிறாள்.)