பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

பிறந்தது. பிறந்து வளர்ந்து பழக்கமான ஊர் இது இங்கே என்னைக் கண்டா யாருக்கும் பயம்—போக்கிரி பொன்னன் இங்கே. பொன்னியைக் கூட்டிக்கிட்டு வேற ஊருபோனா என்னென்ன கஷ்டப்பட வேண்டி வருமோன்னு கவலை தோண ஆரம்பிச்சுது. ‘பொன்னி! பயப்படாதே! வயதான காலத்திலே, உன் அப்பாவை தனியாத்தவிக்க விட்டுவிட்டு, நாம்ப போயிடக் கூடாதுன்னு’ காரணம் சாட்டினேன். பொன்னிக்கு அந்தக் காரணம் சரின்னு பட்டுது. எங்க சினேகிதம் தங்கு தடையில்லாமே வளர்ந்துது. ‘கூத்தாடிக்கிட்டு ஊரைச் சுத்தற எங்க அண்ணன், ஒரு கல்யாணத்தைச் செய்துகிட்டு, வீட்டோடு வந்துவிட்டா. அப்பாவுக்கு நிம்மதி ஏற்படும்—நாம்ப போய்விட்டாலும் அப்பாவைக் கவளித்துக் கொள்ள வழி ஏற்பட்டுவிடும். பக்கிரி அண்ணனோ பாட்டும் கூத்தும் போதும்னு இருக்காரு—இந்த இக்கட்டுக்கு நாம்ப என்ன செய்யறதுன்னு’ பொன்னியே சொல்லுவா? இந்தச் சமயத்திலேதான் பொன்னி...

தங்:— கர்ப்பமா...?

பொ:— ஆமாம்...... பொன்னி, புலியா மாறிவிட்டா—உடனே எதாச்சும் வழி செய்தாக வேணும்—இனியும் காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தா முடியாதுன்னு வற்புறுத்த ஆரம்பிச்சா... எனக்கு, அப்போ சந்தர்ப்பம் சரியில்லை. பக்கத்துக் கிராமத்து மிராசுதாரன் தன் பண்ணையாள் ஒருத்தனைத் தடியாலே அடிச்சு கொண்ணுபோட்டான்—மத்த பண்ணையாள் பூரா கிளம்பிவிட்டுது பண்ணையாரைத் தீர்த்துக் கட்டிவிடறதுன்னு—போலீசு போட்டாங்க—ஒண்ணும் பலிக்கவில்லை — மிராசுதாரன் அறுவடைக்கே ஆள் கிடைக்காமெ திண்டாடினான்—எனக்கு ஆள் வந்துது—ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாபோல தர்ரதா சொன்னான்—பண்ணையாட்களை உருட்டி மிரட்டி வைக்கவேணும்—அறுவடை வேலைக்கு புது ஆளுகள் வந்திருந்ததே, அவங்களைப் பழைய ஆளுக அடிக்காமப் பாத்துக்க வேணும், இது நம்ம, ட்யூடி—மொத்தமா ஐநூறு கொடுத்தான். என் ஆளுங்களுக்கும் பங்கு கொடுத்து விட்டு, நானும் செலவு செய்துவிட்டேன். ஒரு மூணு மாசம் போனா, பண்ணையாரு, மேலும் பணம் தருவாரு—அதனாலே, எனக்கு அந்தச் சமயம், பொன்னி-