பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

காரியம் செய்கிறதானாலும், இலாபம் இருக்கான்னுதான் சுயநலக்காரனுங்க பார்ப்பானுங்க — நியாயம், நீதி — தர்மம் — சாஸ்திரம், வேதம்—எல்லாம் சும்மா, பேச்சுக்கு—குறிமட்டும், எப்பவும் இலாபம் — சுயநலம்— இதிலேதான்.

பொ:— என் மனம் பதறுது பக்கிரி! பாவம்! தங்கவேலைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும்னு தோணுது—ஆனா, அவன் போலீசிலே சொல்லிவிடுவானோ என்னமோ...

ப:— உண்மையைச் சொன்னா, அவன் உன்மேலே பரிதாபப்படுவான், கோபிக்கமாட்டான்...

பொ:— என்னா கோவம் வருது தெரியுமா எனக்கு அந்த ஐயன் மேலே! பசப்பினான் முன்னே — பாவமில்லை ஒண்ணுமில்லே — பொன்னியைக் கட்டிக் கொள்றதிலே தப்பு இல்லேன்னு—இப்ப, தன் மக கலியாண விஷயம் வரச்சே கொலை செய்தாவது கொலப்பெருமையைக் காப்பாத்தவேணும்னு கிளம்பறான்—என்னா கேடுகெட்ட புத்தி...போய், என் ஆத்திரம் தீர அவனை ஏசினாத்தான் என் மனசு சமாதானமாகும் பக்கிரி! ஒரு பாவமும் செய்யாத தங்கவேலை நான் சாகடிக்கக்கூட ஏற்பாடு செய்துவிட்டேன் — அந்த ஐயனோட கலகப் பேச்சாலே ...

(பக்கிரி ஏதோ ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டு)

ப:— ஆத்திரமாப் பேசி ஆகப்போவது ஒண்ணுமில்லே...பொன்னா! எனக்கு ஒரு யோசனை தோணுது—ஐயனுக்குச் சரியான பாடம் கற்பிக்கவேணும்...

(இரசியமாக பொன்னனிடம் ஏதோ பேசுகிறான். பொன்னன் முகமலர்ச்சியுடன் அதைக் கேட்டுவிட்டு)

பொ:— ஓ! சரியான வேலை...ஆமாம், அப்படித்தான் செய்யவேணும்...