பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


மூன்றுதான். இவ்விளமை மணத்தைப்பற்றிக் காந்தியடிகள் பிற்கால வாழ்வில் வருந்திக் கூறுகிறார்.

காந்தியடிகள் இங்கிலாங்தில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு ஆண் குழந்தையும் அவருக்கிருந்தது. இருந்தாலும் காந்தியடிகள் திருமணமாகாதவரைப் போல் நடிக்கத்தொடங்கி விட்டார். இப்பொய் வாழ்வினால் அவர் இன்பம் எதுவும் அடையவில்லை. இயற்கையாக அவரிடம் அமைந்திருந்த கூச்சம் இவ்வழியில் எல்லைமீறிப் போய் விடாமல் அவரைத் தடுத்தாட் கொண்டது.

இவர் தங்கியிருந்த வீட்டிலும் ஒரு மணமாகாத இளம் பெண் இருந்தாள். அவளுடன் இவர் உலாவச் செல்வது வழக்கம். அருகிலிருந்த குன்றின் உச்சிக்கு இருவரும் ஏறுவர். வழியெல்லாம் அவள் ஏதேதோ பேசிக் கொண்டு வருவாள். ஆனால் காந்தியார் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டும் விடையிறுப்பார். அதற்குமேல் அவளோடு சிரித்து மகிழ அவரால் முடியவில்லை. ஏதோ ஒவ்வொருசமயம் ‘ஆகா! என்ன அழகானகாட்சி’ என்று கூறுவார். அதற்கு மேல் பேச அவர் நா எழாது. காலில் குதி உயர்ந்த செருப்பணிந்திருந்தாலும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் குன்றின் உச்சியிலிருந்து அடிவாரத்திற்குப் பறந்து ஒடுவாள். ஆனால் காந்தியார் உச்சியிலிருந்து இறங்குவதற்குத் தவிப்பார். அவள் அடிவாரத்திலிருந்து புன்னகை புரிவாள். “கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வரட்டுமா?” என்று கூறிப் பரிகாசம் செய்வாள். அவர் அடிவாரத்தை அடைந்ததும் ‘சபாஷ்’ என்று கூறிச் சிரிப்பாள். காந்தியாருக்கு வெட்கமாக இருக்கும்

ஒரு நாள் ஒரு ஆங்கில மூதாட்டியோடு காந்தியாருக்கு உணவு விடுதியில் நட்பேற்பட்டது. பின் அந் நட்புரிமை முதிர்ந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவ்வம்மையார் காந்தியடிகளை விருந்துண்ண அழைப்பது வழக்கம்.