பக்கம்:கானகத்தின் குரல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 49 புறப்பட்டு இரவில் வெகுநேரம்வரை பயணத்தை விடாது நடத்தினான். முதல் நாள் முப்பத்தைந்து மைல் சென்று பெரிய சால்மன் சேர்ந்தார்கள். மறுநாள் மேலும் முப்பத்தைந்து மைல் சென்று சிறிய சால்மன் சேர்ந்தார்கள். மூன்றாம் நாள் நாற்பது மைல் பிரயாணம் செய்தார்கள். எஸ்கிமோ நாய்களின் பாதங்களைப்போல, பக்கின் பாதங்கள் உறுதியாக இருக்கவில்லை. அதன் முன்னோர்கள் மனிதனோடு பழகிப்பழகி நாகரிகமாக வாழத் தொடங்கியதால், அவற்றின் பாதங்கள் கடினத்தன்மையை இழந்துவிட்டன. பக்கின் பாதம் மென்மை வாய்ந்தது. நாள் முழுவதும் அது வலியோடு நொண்டி நொண்டிச் சென்றது. முகாம் போட்டுத் தங்கிய உடனே அது உயிரற்றதுபோல் படுத்துவிடும். மிகுந்த பசியாக இருந்தாலும் மீன் உணவைப் பெற்றுக்கொள்ள அது எழுந்து வராது. பிரான்சுவாதான் உணவை அதனிடம் கொண்டுவர வேண்டும். அவன் ஒவ்வோர் இரவிலும் தான் உணவருந்திய பிறகு பக்கின் பாதங்களை அரை மணி நேரத்திற்கு நன்றாகத் தேய்த்துவிடுவான். பனிமான் தோலால் செய்த அவனுடைய பாதரட்சைகளின் மேல்பாகங்களை அறுத்து அவன் பக்குக்குச் சிறிய பாதரட்சைகள் செய்து கட்டினான். அதனால் பக்குக்கு மிகுந்த ஆறுதலேற்பட்டது. ஒருநாள் காலையில் பக்குக்கு இந்தப் பாதரட்சைகளை அணியப் பிரான்சுவா மறந்துவிட்டான்; பக் தன் கால்களை மேலே தூக்கிக்கொண்டு மல்லாந்து படுத்துவிட்டது; பாதரட்சைகள் இல்லாமல் புறப்பட மறுத்தது. அது பாதரட்சைகளை வேண்டி மல்லாந்து படுத்துக் கிடப்பதைக் கண்டு பெரோல்ட் கூடப் பல்லைக்காட்டிக்கொண்டு சிரித்துவிட்டான். நாளாக நாளாகப் பக்கின் பாதங்கள் பனிப்பாதையில் ஒடியோடி நன்கு உறுதி அடைந்து விட்டன. அதனால் தேய்ந்துபோன அதன் பாதரட்சைகளைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒருநாள் காலை, பெல்லி" என்ற ஆற்றின் அருகிலிருந்து புறப்படுவதற்காக நாய்களுக்குச் சேணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். டாலிக்குத் திடீரென்று வெறி பிடித்துக் கொண்டன. அது ஒநாயைப்போல் நீண்ட நேரம் உள்ளம் உருகும்படி ஊளையிட்டுத் தனக்கு வெறி பிடித்திருப்பதை வெளிப்படுத்திற்று. பயத்தால் ஒவ்வொரு நாயும் மெய்சிலிர்த்தது. டாலி பக்கின்மேல் பாய வந்தது. வெறிபிடித்த நாயைப் பக் பார்த்ததுமில்லை. அதைக் கண்டு பயந்ததுமில்லை. இருந்தாலும் எப்படியோ அதற்குப்

  • இது கானடாவில் பூக்கான் பிரதேசத்திலிருக்கிறது. இது லூயிஸ் என்ற ஆற்றுடன் கலந்து பூக்கான் ஆறாக மாறுகிறது