பக்கம்:கானகத்தின் குரல்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 75 அண்டையில் இருந்த மற்றொரு முகாமிலிருந்து மூன்று மனிதர்கள் வெளியே வந்து இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துச் சிரித்துக் கொண்டும் கண்ணைச் சிமிட்டிக் கொண்டுமிருந்தனர். அவர்களில் ஒருவன், 'உங்கள் வண்டியிலே பாரம் அதிகம். என்னைக் கேட்டால் அந்தக் கூடாரத்தைக் கொண்டு போக வேண்டாம் என்று சொல்வேன்' என்று சொன்னான். 'கூடாரமில்லாமல் நான் என்ன செய்ய முடியும்? அதை என்னால் நினைக்கவே முடியவில்லை' என்று மெர்ஸிடிஸ் தனது அழகிய கைகளை விரித்துக்கொண்டு பேசினாள். 'இது வசந்த காலம்; இனிமேல் குளிர் இருக்காது' என்று அவன் பதில் கூறினான். அவனுடைய ஆலோசனையை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று மெர்ஸிடிஸ் தலையை அசைத்தாள். மலை போலக் கிடந்த சுமைகளின் மீது சார்லஸும், ஹாலும் அதுவும் இதுவுமாகக் கிடந்த ஏதேதோ சாமான்களைத் தூக்கிப் போட்டார்கள். அண்டை முகாமிலிருந்து வந்த ஒருவன் 'இந்தச் சுமைகளோடு வண்டி போகுமா?' என்று கேட்டான். 'ஏன் போகாது? என்று சார்லஸ் சட்டென்று திருப்பிக் கேட்டான். 'ஒ, அதுசரி, அதுசரி. எனக்கென்னவோ கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. அவ்வளவுதான். தலைப்பாரம் கொஞ்சம் அதிகமென்று எனக்குப்பட்டது' என்று அவன் தாழ்ந்த குரலில் சொன்னான். சார்லஸ் மறுபக்கம் திரும்பி வரிகயிறுகளை இறுக்கினான். ஆனால் அவன் சரியாகவே கட்டவில்லை. 'இந்தப் பாரத்தோடு நாள் முழுவதும் நாய்கள் வண்டியை இழுக்குமா?" என்று மற்றொருவன் வினவினான். 'நிச்சயமாக இழுக்கும்' என்றான் ஹால். அவன் குரலிலே போலிமரியாதை தொனித்தது. அவன் தன்கையிலிருந்த சாட்டையை ஓங்கிக்கொண்டு “மஸ்டி, மஷ் என்று கூவினான். நாய்கள் தங்கள் மார்பைக் கொடுத்துப் பலங்கொண்ட மட்டும் கொஞ்ச நேரம் இழுத்துப் பார்த்தன. பிறகு அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டன. வண்டியை அவைகளால் அசைக்க முடியவில்லை. 'சோம்பேறிக்கழுதைகள். எப்படி இழுக்கவேண்டும் என்று இப்போது காண்பிக்கிறேன் என்று அவன் கூவிக்கொண்டே சாட்டையால் அடிக்க முனைந்தான்.