பக்கம்:கானகத்தின் குரல்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கனகத்தின் குரல் அவர்களுக்குச் சலிப்பே ஏற்படவில்லை. நிலைமையைச் சமாளிக்க முடியாததால், அவர்களுக்குக் கோபமும், எரிச்சலும் அதிகமாகிக் கொண்டே வந்தன. பனிப்பாதையில் சிரமப்பட்டு வேலை செய்வதாலும், பல துன்பங்களை அனுபவிப்பதாலும் ஏற்படுகின்ற தனிப்பொறுமை அவர்களுக்கு ஏற்படவில்லை. அப்படிப்பட்ட பொறுமை அவர்களிடம் கொஞ்சங்கூட இல்லை. அவர்கள் உடம்பில் நோவு எலும்பில் நோவு; உள்ளத்திலும் நோவு. அதனால் அவர்கள் காரத்தோடு பேசலானார்கள். காலைமுதல் இரவு வரையில் கடுஞ்சொற்களே அவர்கள் வாயில் வந்தன. மெர்ஸிடிஸ் சந்தர்ப்பம் கொடுத்தபோதெல்லாம் சார்லஸும் ஹாலும் சச்சரவிட்டுக் கொண்டனர். ஒவ்வொருவனும் தானே அதிகமான வேலை செய்வதாகக் கருதினான். இந்தக் கருத்தை ஒவ்வொரு சமயத்திலும் வெளியிட அவர்கள் இரண்டு பேரும் தயங்கவில்லை. மெர்ஸிடிஸ் சில வேளைகளில் கணவனோடும், சில வேளைகளில் தம்பியோடும் கட்சி சேர்ந்தாள். அதன் விளைவாக ஓயாத குடும்பக்கலவரம். தீ மூட்டுவதற்கு யார் விறகு வெட்டி வருவது என்பது பற்றி வாக்குவாதம் தொடங்கும். அது சார்லஸையும் ஹாலையும் பொறுத்த விஷயம் என்றாலும், அது அவர்களோடு முடியாது. குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மாமன், மைத்துனன், உற்றார், உறவினர் எல்லோரையும் சந்திக்கு இழுத்துவிடும். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ளவர்களும், செத்துப்போனவர்களும் கூடத் தப்ப மாட்டார்கள். தீ மூட்ட நாலைந்து குச்சிகளை வெட்டி வருவதற்கும் கலையைப் பற்றிய ஹாலின் அபிப்பிராயங்களுக்கும் அல்லது அவனுடைய தாய்மாமன் எழுதிய சமூகநாடகங்களுக்கும் என்ன சம்பந்தமென்று யாராலும் தெரிந்துகொள்ளவே முடியாது. இருந்தாலும், விவாதம் அவற்றையெல்லாம் சாடும்; சார்லஸின் அரசியல் விருப்பு வெறுப்புக்களும் சந்திக்கு வரும். யூக்கான் பிரதேசத்தில் தீ மூட்டும் விஷயத்தில் சார்லஸின் தங்கை கோள் மூட்டுவதைப்பற்றிப் பேசுவதற்கும் என்ன பொருத்தமிருக்கிறதென்று மெர்ஸிடிஸுக்குத் தான் தெரியும். அவள் அதைப் பற்றித் தன் உள்ளத்திலே செறிந்து கிடந்த கருத்துக்களையெல்லாம் வெளியே கொட்டிவிட்டாள்; அதே சமயத்தில் தன் கணவனின் குடும்பத்தில் மட்டும் காணும்படியான ஒருசில விரும்பத்தகாத தன்மைகளைப் பற்றியும் குறிப்பிட்டாள். இப்படிச் சச்சரவுதான் நடக்கும்; தீயை யாரும் மூட்டமாட்டார்கள். கூடாரம் பாதி அடித்ததுபோலக் கிடக்கும். நாய்கள் வயிறு வாடும்.