பக்கம்:கானகத்தின் குரல்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 93 வைத்து முன்னும் பின்னும் அசைந்தாடுவான்; அதே சமயத்தில் பக்கை வைவதுபோலப் பேசுவான். அந்தப் பேச்சில் உள்ள அன்பைப் பக் உணர்ந்துகொண்டது. கைகளால் அழுத்தி அணைத்துக் கொண்டிருப்பதாலும், செல்லமாகத் திட்டிப் பேசுவதாலும், முன்னும் பின்னும் அசைந்தாடுவதாலும் பக் மிகப்பெரிய உவகை அடைந்தது. அந்தப் பேருவகையால் அதன் உள்ளமே வெடித்து விடுமோவென்று தோன்றியது. அணைப்பிலிருந்து அவன் விட்டவுடன் அது தாவி எழுந்து நிற்கும், அதன் வாயிலே சிரிப்புடன் குறி தோன்றும். கண்களிலே அதன் அன்பு முழுவதும் வெளியாகும். அதன் குரல்வளையிலே பேச்சொலியாக உருவெடுக்காத அன்புணர்ச்சிகள் ததும்பும். அந்த உணர்ச்சிப்பெருக்கால் அது அசையாமல் நின்றுகொண்டிருக்கும். அதைக் கண்டு ஜான் தார்ன்டன், 'கடவுளே! உனக்குப் பேசத்தான் முடியவில்லை' என்று பயபக்தியோடு கூறுவான். தார்ன்டனுடைய கையைக் கடிப்பதைப்போல பக் வாயினால் கெளவிப்பிடிக்கும். அன்பை வெளியிடுவதற்கு அதையே அது சிறந்த வழியாகக்கொண்டது.அது நன்றாகக் கவ்விப்பிடிப்பதால் கையிலே பல் பதிந்ததுபோல அடையாளம் தென்படும். தார்ன்டன் திட்டிப்பேசுவதை அவனுடைய கொஞ்சலாகப் பக் கருதியது போலவே, பக்கின் இத்தகைய போலிக்கடியைத் தார்ன்டன் அதன் அன்பின் அரவணைப்பாக உணர்ந்துகொண்டான். தார்ன்டன் அதைத் தொடும்போதும், அல்லது அதனுடன் பேசும்போதும் அது பெருமகிழ்ச்ச்சியிலே மூழ்கித்திளைத்த தென்றாலும், தார்ன்டன் இவ்வாறு தன்னிடம் அன்பு காட்ட வேண்டுமென்று அது நாடவில்லை. தார்ன்டனுடைய கையின் அடியிலே ஸ்கீட் தனது மூக்கை வைத்துக்கொண்டு, கையைத் தள்ளித் தள்ளிக் காண்பிக்கும். தன்னைத் தடவிக்கொடுக்க வேண்டுமென்று அது அவ்வாறு செய்யும். தார்ன்டனுடைய முழங்காலின் மேல் நிக் தனது பெரிய தலையை வைத்துக்கொள்ள ஆசைப்படும். ஆனால் பக் இவ்வாறெல்லாம் செய்யாமல் தூரத்திலே தள்ளி நின்று தார்ன்டனை அன்போடு பார்த்துப் போற்றுவதில் திருப்தி அடையும். தார்ன்டனுடைய பாதங்களுக்கு அருகில் ஆவலோடும், ஆர்வத்தோடும் மணிக்கணக்காக அது படுத்திருக்கும். அப்படிப் படுத்துக்கொண்டு அவன் முகத்தையே பார்க்கும்; பார்த்து அதில் தோன்றுகின்ற ஒவ்வோர் உணர்ச்சியையும் மாறுதலையும் மிகக் கூர்ந்து கவனிக்கும்; சில வேளைகளில் அவனுக்குப் பக்கத்திலோ அல்லது பின்னாலோ சற்று தூரத்தில் படுத்துக்கொண்டு அவனுடைய உடம்பின் ஒவ்வோர் அசைவையும் கவனித்துக்கொண்டிருக்கும்.