பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XII

எண்ணியிருந்தார்கள். சில வருஷங்களுக்குள்ளாக கான்சாகிபு அவர்களுடைய நண்பனாக ஆக முயற்சி செய்தான். அவர்கள் இக்காலத்துக்குள் அவன் செய்த தீமைகளை மறந்து விட்டிருப்பார்களா என்று சொல்ல முடியவில்லை.

கான்சாகிபு சுதந்திர மன்னனைப் போல நடந்து வருவதையறிந்த பிரிட்டிஷ் கம்பெனியாரும், நவாபும் அவனைப் பதவியிலிருந்து அகற்ற முடிவு செய்தனர். இதற்கென ஒரு படையைத் திரட்டி அனுப்பினர். இதன் தளபதியாக கர்னல் மன்ஸார் நியமிக்கப்பட்டான் நீண்டகால முற்றுகைக்குப் பின்னர் 14-10-1754-ல் மதுரைக் கோட்டை பிடிபட்டது. கான்சாகிபு சிறைப்படுத்தப்பட்டான். அன்றே அவன் தூக்கில் இடப்பட்டான்.

கதைப் பாடலின் பாத்திரங்கள்

பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்து கான்சாகிபு நடத்திய போர்களைப் பற்றி இக்கதைப் பாடல் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. அவனுடைய வரலாற்றில் முக்கியமான பகுதி திருநெல்வேலிப் பாளைக்காரர்களோடு நடத்திய போர்களாகும். இதைப் பற்றி கதைப் பாடல் எதுவும் கூறவில்லை. மதுரையில் கான்சாகிபு சுபேதாராகப் பதவியேற்ற காலம் முதல்தான் கதை தொடங்குகிறது. கான்சாகிபுவின் வாழ்க்கையில் கடைசி ஏழு ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளே கதைப் பொருளாகும்.

இக்கதையின் தலைவன் கான்சாகிபு அல்ல. சிவகங்கைத் தளவாய் தாண்டவராயனே கதையின் தலைவனாவான். இவன் நவாபிடம் சென்று, கான்சாகிபுவின் சுயாட்சி நோக்கத்தைக் கூறி படைகொண்டு வரச் செய்து, மதுரையைப் பிடிக்கத் தூண்டியவன் என்று கதைப் பாடல் கூறுகிறது. இவனை அரசியல் சூழ்ச்சியுடையவனாகக் கதை வருணிக்கிறது. அவனுடைய அரசியல் சூழ்ச்சியின் முன்னால் ராணுவ வலிமை பயனற்றுப் போகிறது. தன்னைவிட உயர்ந்த பதலியிலுள்ளவர்களைக்கூடத் தனது தந்திரத்தால் அவன் தன் வழிக்குக் கொண்டு வருகிறான். கான்சாகிபைப் படை பலத்தாலும், வீரத்தாலும் வெல்ல முடியாததைக் கண்டு, பணத்தைப் பயன்படுத்தி மித்திர பேதம் செய்து, சீனிவாசராவ், மார்ச்சண்டு ஆகிய வஞ்சகர்களின் உதவியால் கான்சாகிபுவைச் சிறைப் படுத்தினான். சிங்கத்தின் வீரம் நரியின் தந்திரத்தின் முன் நிற்க முடியவில்லை.

கதைப்பாடல், கான்சாகிபு, சிவகங்கையோடு சச்சரவு தொடங்கிய காலத்திலிருந்து அவனது வரலாற்றைத் தொடங்குகிறது. ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பாளையங்களின் சில பகுதிகளை மதுரைச் சுபாவோடு சேர்த்துக்கொள்ள அவன் ஆசைப் படுகிறான்.