பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

III

மூலத்தை நிர்ணயித்து, எழுதப்பட்டன. சில வரலாற்றுக் கதைப் பாடல்களின் பெயர்கள் மட்டும் தெரிகிறது. ஆனால் அவை கிடைப்பதில்லை. உதாரணமாக, பூலுத்தேவன் சிந்து என்ற பெயருள்ள நாட்டுப் பாடல் இருப்பதாகப் பல நண்பர்கள் சொன்னார்கள். தேடிப் பார்த்தால் அகப்படவில்லை.

இக்கதைப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழக வரலாற்று ஆராய்ச்சிக்கும், இலக்கிய ஆய்வுகளுக்கும், சமுதாய மொழி இயல் ஆராய்ச்சிகளுக்கும் அவசியமாகும். இக்கதைப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்குவதற்கு இவை அச்சிட்டு வெளியிடப்படவேண்டும்.

தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் இன்னும் மக்கள் நிலைவிலிருந்து அழியாமலிருப்பதற்குக் காரணம், அத்தெய்வங்களின் வழிப்பாட்டு நாட்களில் அவை பாடப்படுவதே. இன்றும் கொடை நாட்களில் நெல்லை மாவட்டத்தில் அம்மன் கதைகளும், மாடன் கதைகளும் வில்லுப்பாட்டுக்களாகப் பாடப்படுகின்றன. ஆனால் வரலாற்று வீரர்கள் தெய்வங்களாக வணங்கப்படுவதில்லை. கட்டபொம்மனுக்கோ, தேசிங்கு ராஜனுக்கோ கோவில்கள் இல்லை: கொடை நடத்துவதும் இல்லை. மிகப் பழங்காலத்து வீரர்களுக்குக் கோவில்கள் உள்ளன. ஆனால் அது அவர்களுடைய பெயரால் வழங்காமல் வேறு அம்மன் பெயரால் வழங்கும். வெள்ளையரை எதிர்த்துப் போராடிய வீரர்களின் கதைகள், பிற்கால விடுதலைப் போராட்ட உணர்வை வளர்க்கும் தூண்டுகோலாக நாட்டு நினைவில் (Folk Memory} இன்னும் வாழ்கின்றன. அந்தப் போராட்ட நினைவுகள் இந்தப் பரம்பரையில் மறந்து வருகிறது. இக்கதைகளும் சிறிது காலத்தில் மறந்து போகலாம். ஆகவே இப்பொழுதே அவற்றை அச்சிட்டு நிலைநிறுத்துவது அவசியமான பணியாகும்.

கதைப் பாடல்கள் மக்கள் முன் பாடப்படுபவை. நாட்டுப் பாடகர்கள், தங்கள் முன்பிருக்கும் சபையை மகிழ்விப்பதற்காகப் பல அடிகளையும், கதைப்பகுதிகளையும் மாற்றிக் கூறுவார்கள். எனவே சில பகுதிகள் மாறுதலுக்குள்ளாகும். எனவே தமிழகத்தில் பல பகுதிகளில் கதையின் நிகழ்ச்சிகளில் வேறுபாடு காணப்படலாம்.

நமக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுக் கதைப் பாடல்கள் கூறும் நிகழ்ச்சிகளின் காலம் 15-ம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவு வரை ஆகும். இடையே சில பத்தாண்டுகளுக்கு இடைவெளி விழுகிறது. இக்கதைகளின் நிகழ்ச்சிக் காலத்தை மூன்று பிரிவாகக் கொள்ளலாம்.