பக்கம்:காப்டன் குமார்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தவிர வேறு யாரும் இல்லையே. அவன் தந்தையைப் பற்றிச் சுவான் நன்கு அறிவான்.

அவர் பெயர் ராமசாமிப் பிள்ளை. சுவானின் தந்தையைப் போலவே பர்மாவில் வந்து செல்வத்தைப் ‘பையா' வாகக் குவித்தவர்தான் அவரும். ஆனால் அவரது சிந்தனை முழுவதும் பாரதத்தையே சுற்றித்தான் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். தாம் ஓர் இந்தியன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப் படக்கூடியவர். இல்லாவிட்டால் அவருடைய மிகப் பெரிய மில்லுக்கு 'நேதாஜி மில்' என்றும்; அங்காடிக்கு ‘இந்தியா ஸ்டோர்' என்றும் பெயரிட்டிருப்பாரா?

வந்த புதிதில், சிறிது பணம் சேர்ந்ததும் அதை எடுத்துக் கொண்டு தாய்நாடு சென்றார். தூரத்து உறவில் விட்டுவந்த ஒரு பெண்ணை மணந்து, அவளைத் தம்மோடு பர்மாவுக்கும் அழைத்து வந்து விட்டார். அவள் வந்த வேளை ராமசாமிப் பிள்ளையிடம் அதிருஷ்ட தேவதை துள்ளி விளையாடினாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் குமார். அதற்கடுத்துப் பிறந்தவள் சாந்தி. அந்தப் பிரசவத்தின் போதுதான், ஜன்னி கண்டு ராமசாமிப் பிள்ளையின் மனைவி இறந்தாள்.

"இனிமேல் எனக்கு இங்கே என்ன இருக்கிறது", என்று மனைவி இறந்ததிலிருந்தே ராமசாமிப்பிள்ளை சொல்லிவந்தார். தாய் நாடு திரும்பிவிடவேண்டும் என்று துடித்தார். மனைவியைப் பறித்துக் கொண்ட பர்மியமண் அவருக்கு நெருப்பாகச் சுட்டது. ஆனால்