பக்கம்:காப்டன் குமார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

புதிய சட்டத்தின் அதிர்ச்சிக்கு ஆளாகி தந்தை இறந்த பின்னர்- தாயற்ற தன் சிறு வயது தங்கையுடன் இந்தியா வுக்கு அகதியாகப் புறப்படுகிறான். வழியில் அவன் தங்கையை இழந்து தவிப்பதையும்-- தங்கையை மீண்டும் அடைவதற்காக இடையில் அநுபவித்த எல்லையற்ற துன்பங்களையும் இந்த நாவலில் நீங்கள் படிக்கப் போகிறீர்கள்.

எல்லாச் சிறுவர்களையும்போல-அவனுக்கும் பள்ளி சென்று தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. ஆனால் அங்கு அவன் பட்டபாடு! அனுபவித்த அவமானம்!

குழந்தைகளே! குமாரைப் போலவும், குழந்தை வசந்தியைப் போலவும் இன்று நம் அண்டை நாடான இலங்கையிலிருந்து ஆயிரக் கணக்கான குழந்தைகளும் பெற்றோர்களும், தங்கள் சொத்து சுகங்களையெல்லாம் சம்பாதித்த மண்ணிலேயே உதறிவிட்டு; வெறுங்கையுடன் நம் நாட்டிற்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

அந்தக் குழந்தைகள் என்றாவது ஒரு நாள் உங்கள் பள்ளியில் - உங்கள் வகுப்பில் - உங்கள் அருகில் படிப்பதற்காக வந்து உட்காரலாம். அப்போதெல்லாம் அவர்களை ஏழைகள் என்றோ; அன்னியன் என்றோ எண்ணி நீங்கள் கேலி செய்யவோ-கேவலமாகப் பேசி அவர்கள் மனத்தைப் புண்படுத்தவோ செய்யாதீர்கள்.

அவர்கள் புதியவர்களைப்போல் தோன்றினாலும்; அன்னியர்கள் அல்ல. அவர்களும் உங்கள் சோதரரே!

அவர்களுக்காக இரங்குங்கள். உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். அவர்களுக்கு உங்களைப்போல் சரியாகத் தமிழ் பேசத் தெரியாமல் கூட இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காப்டன்_குமார்.pdf/8&oldid=1117871" இலிருந்து மீள்விக்கப்பட்டது