பக்கம்:காரும் தேரும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. குளிர் தூங்கும் குற்றாலம்

இயற்கை மனிதனுக்கு எண்ணிறந்த எழிற் காட்சி களை வாரி வழங்கி யிருக்கின்றது. பொன்னிறக் கதிர்களைப் பரப்பிக் காலைப் பொழுதில் கோலம் புதுக்கும் கதிரவன்; அவனே மாலைப் பொழுதில் மேற்கு வாயிலில் மறைகின்ற பொழுது, அந்திச் செக்கர் வானத்தில் மறைகின்ற அழகுக் காட்சி; இரவின் அமைதிச் சூழலில் வெண்ணிறக் கதிர் களைப் பரப்பித் தண்ணிலவு பொழியும் வெள்ளி நிலா: விண்ணைத் தொட உயர்ந்து நிற்கும் கரிய பெரிய மலை: அம் மலையினின்றும் சலசலத்து விழுகின்ற அருவி; அருவிக் கரையின் இரு மருங்கிலும் அழகு மலர்களை மலர்வித்து நிற்கும் பூங்கிளைகள்: நித்த நித்தம் புத்தம் புது மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர்த்தோட்டம்; நெடிதோங்கி வளர்ந்து நிற்கும் தென்னை மரங்கள்; வளமுடன் வளர்ந்து குலை சுமந்து நிற்கும் வாழை, கமுகு முதலிய மரங்கள்: கொத்துக் கொத்தாகப் பூந்துணர்விட்டுக் காய்த்துப் பழுத்துத் தொங்கும் மாம்பழங்களைக் கொண்டுள்ள மாமரம்; அம்மா மரக் கிளையில் அமர்ந்து, தவழ்ந்து வரும் தென்றலில் இன்னிசை முழக்கும் கோலக் குயில்: அக்கோலக் குயிலின் விந்தைக் குரலைக் கேட்டுத் தலையசைத்து நிற்கும் பச்சைப் பசுங்கிளி; மரகதக் கம்பளம் விரித்தாற் போன்று தளதளவென்று வளர்ந்து செறிந்து காணும் நெற் கதிர்கள்; அவைகளைத் தாய்போல் தழுவி நீவிவிட்டுச் செல்லும் தென்றல் ஆகிய இத்தகு எழில்மிகு காட்சிகள் எல்லாம் இயற்கை அன்னை மனிதனுக்கு வாரி வழங்கி யிருக்கும் வற்றாத அன்புப் பரிசுகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/133&oldid=554129" இலிருந்து மீள்விக்கப்பட்டது