பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

ஆகவே, அம்மையார் பாம்பைக் கண்டு அஞ்சுகிறார். மாலை பூண்டு அழகாக இருக்கும் மார்பில் இந்த நஞ்சுடைய பாம்பு புகுந்தால் என்ன விபரீதம் நேருமோ? இதை விடுவது நல்லது அன்று; பொல்லாதது என்று எண்ணுகிறார்.

அந்த நாகம் அவர் மேல் ஊர்கிறது. அது பெரிய பாம்பு; அது அடாத செயலைச் செய்வது; மிகவும் அடாத நாகம் அது. "அது உயிரை உண்டு விடும் என்று சொல்ல மனம் இல்லை. 'ஆ! இது பொல்லாது. அடாத செயல் செய்வது" என்று சொல்கிறார்.

“என்ன அம்மா, இப்படிப் பயப்படுகிறீர்கள்? இறைவனுக்கு இது அணிகலன் அல்லவா? அளன் நஞ்சையே உண்டவன் ஆயிற்றே. தேவர்கள் நடுநடுங்கும்படி வந்த ஆலகால விடத்தையே உண்டு கலங்காமல் இருக்கும் போது இந்தப் பாம்பு எனன செய்துவிடும்?” என்று ஒருவர் கேட்கிறார்.

அம்மையாருக்கு நடுக்கம் போகவில்லை. “தாமதம் செய்யாதீர்கள். ஏதாவது தவறு நேர்ந்தால் மிகவும் ஆபத்தாகி விடும், உடனே பாம்பைத் துரத்துங்கள்” என்கிறார்.

தொண்டர் சிரிக்கிறார். "இறைவன் இன்றுதான் இதை அணிந்தானா? எத்தனையோ காலமாக இது அவன் திருமேனியில் இருக்கின்றது. நீங்கள் சொல்கிற தாரோடு தாராக குளிர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருக்கின்றதே! இவ்வளவு காலம் வாராத ஆபத்துப் புதிராக முளைத்து விடுமா?” என்று கேட்கிறார்.

அம்மையார் அவர் கூற்றை மறுக்க முடியவில்லை. ஆனாலும் அம்மையாருடைய அச்சம் இன்னும் நீங்கவில்லை. எப்படியாவது இந்தப் பொல்லாத நாகத்தை இறைவன் திரு மார்பிலிருந்து ஓட்டிவிட வேண்டுமென்று பார்க்கிறார். தகவுடையார் யாவரும் அதைச் செய்ய மாட்டார்கள் போலத் தோன்றுகிறது.