பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



90


அம்மையார் சொன்ன காரணம், அதாவது இறைவனுக்குப் பாம்பால் தீங்கு நேரலாம் என்ற காரணம் சரியென்று என்றுதானே தொண்டர், தகவுடையோர் ஒருவர், எடுத்துரைத்தார். அதற்கு மறுப்புச் சொல்ல வேண்டாம்? சொல்வதும் அவ்வளவு எளிதன்று. ஆகவே வேறு ஒரு காரணத்தைச் சொல்லலாமா? அம்மையார் யோசிக்கிறார், அவருக்கு ஒரு காரணம் தோன்றுகிறது. ஆம்! அந்தக் காரணத்தை யாரும் மறுக்க முடியாது.

"நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கட்டும். பாம்பு எம்பெருமானை ஒன்றும் செய்யாது என்பதை இப்போதைக்கு ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மற்றோர் ஆபத்து இருக்கிறதே அது வராமல் தடுப்பது எம்படி?”

"என்ன ஆபத்து?”

"எம்பெருமான் திருமேனியோடு ஒட்டிப் பாதியும் பாதியுமாக இறைவி இருக்கின்றாளே, அவள் இமயமலை ராசனுடைய செல்லக்குழந்தை அல்லவா? ஒரு கணமும் எம்பெருமான விட்டு அகலாமல் அவனுடைய வாம பாகத்தில் ஒட்டி இணைந்து விளங்கும் உமாதேவியை மறந்துவிட்டீர்களே! அந்தப் பாம்பு இறைவன் திருமேனியளவில் நின்றுவிடும் என்று சொல்ல முடியுமா? அதுதான் எப்போதும் நாக்கை நீட்டிக்கொண்டு உணர்ந்தபடியே இருக்கிறதே! மலைமகள் மீது தாவலாமே! ஒரு நாள் அந்தப் பிராட்டியின் மேலே ஊர்ந்தால் ஏ! அதை நினைத்தாலே பயமாய் இருக்கிறது. அப்படி ஆடும்படி விடுதல் மகாபாவம். பெண் பாவத்தைக் கொட்டிக் கொள்ளாதீர்கள். பெண்ணின் இயல்பு எனக்கல்லவா தெரியும்? இந்தப் பாம்பு இந்த எல்லையை விட்டுத் தாண்டமாட்டேன் என்று முறியா எழுதிக் கொடுத்திருக்கிறது? அம்பிகையின் திருமேனியில் புகாது என்று உறுதி கூறுவீர்களா?"

யாவரும் யோசிக்கிறார்கள்.