பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. பெருஞ் சேமம்


மனிதன் மனத்தின் வசப்பட்டு வாழ்க்கையில் அவலத்தை அடைகிறான். மனம் பேய் போன்றது. பேய் சும்மா இராது. அதற்கு எதையாவது பலி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், பிறருக்குத் துன்பம் தருவதே பேய்க்கு இயல்பு. தன்னுடைய காட்சியாலே பிறருக்கு அச்சத்தை உண்டாக்கி, தன் தொடர்பாலே துன்பத்தை விளைத்து அதனால் இன்பத்தை அடைவது பேய்க்குணம்.

மனமும் எப்போதும் ஆசையின்மேல் ஆசையாகக் கொண்டு நம்முடைய காலத்தைப் பலி கொள்கிறது; வாழ்க்கையையே அழித்து விடுகிறது. "மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் மனத்தை அடக்கத் தெரிந்து கொண்டால் அதுவே நமக்கு ஏவல் செய்யும். பேயை ஒருவன், அடக்கும் ஆற்றல் பெற்றுவிட்டால் அது வேறு யாரும் செய்ய முடியாத காரியத்தையெல்லாம் சாதித்துத் தரும். மதம் பிடித்த யானை போன்றது அடங்காத மனம். அதனால் எந்தச் சமயத்தில் எந்தத் தீங்கு வருமோ தெரியாது. பழகிய யானை ஐம்பது மனிதர்கள் செய்யும் வேலையைச் செய்யும். மரங்களை உருட்டிக் கொண்டு வரும். பெரும் போரில் பகைவர்களை அழிக்கும். பாகன் தன்னைக் கட்ட வரும்போது தானே சங்கிலியை எடுத்துக் கொடுக்கும்.

மனத்துக்கு உள்ள சக்திக்கு அளவே இல்லை. மனத்தினை அடக்கியவர்கள் பல சித்திகளைப் பெறலாம். எல்லாச் சித்தி