பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


களையும்விட மனத்தை அடக்கும் சித்தியே பெரிதென்று தாயுமானவர் சொல்கிறார்.

'சினம்இறக்கக் கற்றாலும்
சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு
வாய்ஏன் பராபரமே.”

மனத்தை அடக்கியவர்கள் பிறர் உள்ளத்தில் ஒடும் எண்ணங்களை அறிவார்கள்; எதிர்காலத்தில் நிகழப் போவதை அறிவார்கள்; எல்லாவற்றையும் மறந்த ஆனந்த நிலையைப் பெறுவார்கள்.

நமக்குப் பகையாகிற மனம் மேலும் மேலும் பிறவிகளை எடுப்பதற்குக் காரணமாக நிற்கிறது உறவான மனம். தானே தன்னை அடக்கிக் கொண்டு நம்முடைய வாழ்வைப் பயனுடையதாக்கிப் பேரின்பப் பெருவாழ்வைப் பெறத்துணையாகிறது.

மனம் மூன்று குணங்களை உடையது. நமக்குப் பெரும்பாலும் தாமத குணமே மிகுதியாக இருக்கிறது. ராஜச குணமும் இருக்கிறது. சத்துவகுணம் மிகக் குறைவு. சத்துவ குண மனம் வலிமையுடையதானால் அது மற்றக் குணங்களை அழித்து விடும்.

கிராமங்களில் பிணத்தைச் சுடும் வெட்டியான் தன் கையில் ஒரு மூங்கில் தடியை வைத்திருப்பான். பிணம் எரியும் போது நீர் சுருங்குவதனால் கைகால்கள் விறைக்கும். அந்தத் தடியால் அவற்றை அடித்து ஒழுங்குபடுத்துவான். விறகைக் தள்ளி யாவும் எரியும்படி செய்வான். எல்லாவற்றையும் எரியப் பண்ணின பிறகு அந்தத் தடியை அந்த நெருப்பிலேயே போட்டு எரித்து விடுவான். யாவற்றையும் எரிக்க உதவிய அந்தத் தடி கடைசியில் தானும் நெருப்பில் எரிந்து போகின்றது.