பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


பெருங்கருணையை எண்ணி வியந்து வியந்து பாராட்டத் தோன்றும். நாம் செய்கிறோமா?

இனிமேல் நமக்கு அவன் சொர்க்க இன்பத்தையோ மோட்சத்தையோ வழங்குவது இருக்கட்டும் இப்போது எல்லாவற்றையும் தந்து வாழ வைத்திருக்கிறானே அதுவே பெரிய காரியமல்லவா? அதற்காகவாவது நாம் நன்றிப் பெருக்குடன் அவனை வழிபட வேண்டாமா? ஒன்றுக்கும் பற்றாத எளியேனுக்கு எத்தனை நன்மைகளைச் செய்திருக்கிறாய் என்று உருகுவது பெரியவர்கள் இயல்பு. ஆழ்வார்" களிலும் அப்படி உள்ள பாடல்கள் பலப்பல.

நம்மைப் பெற்றுப் பாலூட்டிக் காப்பாற்றும் தாயை விட, நமக்கு வேண்டியவற்றையெல்லாம் வாங்கி அரவணக்கும் தந்தையைவிட ஆண்டவன் பெரியவன். நம் தாய் தந்தையரிடத்தில் நமக்கு இயற்கையாகவே ஒரு பாசம் உண்டாகிறது. தாய் அடித்தாலும் குழந்தை அவளிடமே ஒட்டிக் கொள்கிறது.

இறைவனிடம் அப்படி ஒரு பாசம் நமக்கு இருக்க வேண்டும். "பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய்” என்று திருவெம்பாவையில் வருகிறது. உண்மையான பக்தர்கள் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் அவனோடு பின்னிப் பிணைந்து கிடப்பார்கள்; அவன் அடியையே பற்றிக் கொண்டிருப்பார்கள். “நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்று இருப்பார்கள். அவன் திருவடியையே புகலாக அடைந்து பற்றிக் கிடப்பதனால்தான் அடியார் என்ற பெயர் வந்தது.

வழிபாட்டை வியாபாரமாகப் பண்ணுகிறவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள்; அர்ச்சனை செய்வார்கள்; தம்முடைய செல்வச் செழிப்பை விளம்பரப் படுத்தும் வகையில் அலங்காரம் செய்வார்கள். இவ்வளவும் இறைவனுக்கு லஞ்சம் கொடுத்து ஒன்றைப் பெறுவதற்காகச்