பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


செய்கிற காரியங்கள். அவர்கள் இவ்வாறு விளம்பரத்துக்காகச் செய்யும் போலிப் பக்தியைக் கண்டு இறைவன் சிரிக்கிறானாம். அவர்களுடைய நெஞ்சிலேயே அவன் இருக்கிறான். ஆகையால் அந்த நெஞ்சில் என்ன எண்ணுகிறார்கள் என்பதை அவன் நன்றாக அறிந்து கொள்கிறான். ‘நம்மைப் பூவாலும் நீராலும் ஏமாற்றப் பார்க்கிறார்கள்’ என்று அவன் அங்கிருந்தபடியே சிரிக்கிறானாம்.

"பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே"

என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.

இந்த ஆடம்பரப் பக்தர்கள் தாம் செய்கிற பூசையை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்று கவலைப்பட மாட்டார்கள். நாலுபேர் பார்த்துத் தம்மை மகா பக்தர்கள் என்று பாராட்ட வேண்டும் எண்ணுவார்கள். இறைவன் திருக்கோயிலுக்குக் கற்பூரத்தட்டு வாங்கி அளிப்பார்கள். அதன் விலை இருபது ரூபாய் இருக்கும். அதில் தம்பட்டங்களுடன், விலாசத்துடன், முழுப் பெயரையும் பொறிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எல்லாம் சேர்ந்து 200 எழுத்துக்கள் இருக்கும். எழுத்துக்குக் கால் ரூபாய் வீதம் மொத்தம் ஐம்பது ரூபாய் கொடுப்பார்கள்; தட்டின் விலையைப்போல இரண்டு பங்கு தகுமே! தட்டின் விலை இருபது ரூபாய்; வெட்டின் விலை ஐம்பது ரூபாய்! எல்லாம் விளம்பர மோகம்! இவற்றையெல்லாம் பக்தியின் வெளியீடு என்று சொல்லலாமா?

நாம் நம் கண் முன்னால் பணக்காரர்கள் செய்யும் விளம்பரப் பகுதியை, ஆடம்பர ஆராதனையைப் பார்த்திருக்கிறோம். காரைக்காலம்மையார் எல்லோரையும் விடப் பெரிய பணக்காரர்கள் செய்யும் ஆரவாரத்தை மனக் கண்ணால் பார்க்கிறார்.