பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


மனத்தை இறைவன் திருவடியில் ஈடுபடுத்தாமல் செய்யும் பூஜை பயனற்றது.

"கைஒன்ற செய்ய விழிஒன்று நாடக்
கருத்தொன்று எண்ணப்
பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்
புலால்கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று
கேட்க விரும்புமியான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்
வாய்வினை தீர்த்தவனே.”

என்று பட்டினத்தார் பாடுகிறார். இந்த எண்ணம் இருந்ததால் இறைவனைப் பற்ற முடியாது.

இறைவனுடைய திருவடியில் மலரிட்டு அருச்சிக்கிரறோம். மற்ற அங்கங்களுக்குத் தனியே அர்ச்சனை பண்ணினாலும் திருவடிக்கே மலரிட்டு அருச்சிப்பது சிறப்பு. அப்படி அருச்சிக்கும் போது வெறும் மலரை மட்டும் திருவடியில் இட்டால் போதாது.

ஆண்டவன் திருவடியை நேரே பார்த்தால் மனம் அங்கே பதியாது. ஓரிடத்தில் அடையாளம் செய்து அங்கே அம்பை எய்வது போல, மலரைத் திருவடியிலே வைத்து இனம் கண்டுகொண்டு, அங்கே நம் மனத்தை வைத்துப் பழக வேண்டும். மலரைப் பொருத்துவதோடு நிற்கக் கூடாது; மனத்தையும் பொருத்த வேண்டும்.

" தகட்டிற் சிறந்த கடம்பையும்
நெஞ்சையும் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தருள்வாய்”

என்று இந்த அரிய கருத்தை அருணகிரிநாதர் கந்தர்அலங்காரத்தில் சொல்கிறார்.