பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


மலரைத் திருவடியிலே இயந்திரத்தைப் போலப் போடுகிறவர்களே பலர். அப்படிச் செய்வதனால் அருச்சனையின் பயன் கிடைக்காது. ஆண்டவன் அடியே மலர். அந்த மலரைக் குறிவைத்து மலரை இட்டு அருச்சித்து அதன் வழியே மனமாகிய மலரையும் இடவேண்டும். மலர் பொருந்தும் திருவடியிலே மனமும் பொருந்த வேண்டும்.

அர்ச்சனை செய்பவர்களிடம் இந்த இயல்பைக் காணமுடிகிறதா? உண்மை அன்பர்களிடம் காணலாம்.

தேவர்கள் இறைவனை வழிபடுகிறார்கள். அவனை வழிபட வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதனால் தமக்கு என்ன என்ன பயன் விளையும் என்று நினைந்து பார்கிறார்கள். தம்முடைய வானுலகப் பதவி நிலைத்திருக்க வேண்டும் என்றும், அந்தப் பதவிக்குரிய இன்ப வாழ்வில் இடையூறின்றி வாழ வேண்டும் என்றும், அதற்கு இறைவனைப் பூசிப்பது உபாயம் என்றும் பலகால் நினைக்கிறார்கள்.

“ வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான்; மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து
தம்மைஎல்லாம் தொழவேண்டி"

என்பது திருவாசகம்.

தேவர்களுடைய நினைப்பை அறிந்தவர் மாணிக்கவாசகர். அவர்கள் தம் நலத்தை முதலில் நினைந்து பிறகே இறைவனே வழிபடுவதை நினைக்கிறார்கள். அவர்களுடைய நினைப்பிலே ஆசை இருக்கிறது; பதவி மோகம் இருக்கிறது.

வானவர்கள் நினைக்கிறார்கள்; தம் வாழ்வையும் அதை வளப்படுத்துவான் இறைவன் என்பதையும் நினைக்கிறார்கள். உடனே அவனிடம் சென்று வழிபட மனம் இடம் கொடுக்கவில்லை. அவர்களுடைய அகந்தை தளர்வதில்லை. பலகாலும்