பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



109


செல்வர்கள் ஒருவரைப் பணிய வேண்டும் என்று நினைப்பதே அரிது. அப்படி நினைத்தாலும் எளிதிலே அதைச் செயலிலே காட்டமாட்டார்கள். தம் மதிப்புக்கு இழுக்கு வந்து விடுமே என்று தயங்குவார்கள். அந்த இயல்பையே 'நினைந்து இருந்து என்ற தொடர் காட்டுகிறது.

அம்மையாரோ எப்போதும் நினைந்து கொண்டே இருப்பவர். அங்கே நினைப்பதையே தம் செயலாகக் கொண்டிருந்து என்று கொள்ள வேண்டும். இடைவிடாமல் நினைப்பதையே அது குறிக்கிறது.

வானவர்கள் என்பது தேவலோகத்துக்கு உரிமையாளர்கள் என்று பொருள் தந்து, பதவியால் பெரியவர்கள் என்பதைப் புலப்படுத்தியது.

நீள்மலர் என்பதில் மலர் ஆகுபெயர்; மாலைக்கு ஆயிற்று. பாதம் புனைந்தும் என்ற உம்மை இழிவு சிறப்பு. பாதத்தைத் தொட்டு அலங்கரித்தும் தம் உள்ளத்தில் கொள்வதில்லை என்பதைச் சுட்டியது. பொருந்த மாட்டார் - பொருந்தும் வன்மையில்லாதவர். இப்போது பொருந்த மாட்டார் என்றால் பொருந்தார் என்ற பொருளில் சொல்வோம். பழைய இலக்கியங்களில் பொருந்தார் என்றே சொல்வார்கள். பொருந்த மாட்டார் என்றால் பொருந்தும் வன்மை பெறார் என்று பொருள் கொள்ள வேண்டும்.

தேவர்களுக்குத் தம் நலமே மனத்தில் இருப்பதால் அடியை உள்ளத்தே வைக்கும் உரன் அவர்களுக்கு இல்லை. அந்த உரம் பக்தர்களுக்கே உண்டு; அதனால் அடியார் என்ற பெயர் அவர்களுக்கு வந்தது. தேவர்கள் பூசை செய்தாலும் அடியார் ஆகமாட்டார்கள்; அவர்கள் உள்ளத்தில் இறைவன் அடி பொருந்துவதில்லை.

மின் செய்: செய், உவம உருபு; மின்னைப் போன்ற தோற்றத்தைச் செய்யும் என்றும் பொருள் கொள்ளலாம். வான்-பெருமை.