பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. இருமையிலும் இன்பம்



மனிதன் இந்த உடம்பு பெற்றதன் பயன் மறுபடியும் இத்தகைய உடம்பினுள் வராமல் இருப்பதே. முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல இந்தப் பிறவியால் இனிப் பிறவியே வராமல் செய்துவிட வேண்டும். பிறவி எல்லையில்லாமல் தொடர்ந்து வருவது. முன் பிறவியிலே செய்யும் கன்மத்துக்கு ஈடாக ஜன்மம் கிடைக்கிறது. இந்த ஜன்மத்தில் மறுபடியும் கன்மங்களைச் செய்கிறோம். அவற்றின் விளைவாக மீட்டும் மீட்டும் பிறவிகள் தொடர்ந்து வருகின்றன. இப்படி எல்லை இல்லாமல் தொடர்ந்து வருவதால், அலைகள் தொடர்ந்து வரும் கடலைப் பிறப்புக்கு உவமையாக் குவது மரபு.

"தனியனேன் பெரும்பிறவிப் பவ்வத்து எவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு”

என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். இந்தக் கடலைக் கடப்பது எப்படி?

திருவள்ளுவர் சொல்கிறார் :

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

பெரிய கடலாகிய பிறவியை நீந்துவதற்கு இறைவன் திருத்தாள் புணையாக உதவும். கடலில் ஆழாமல் மிதந்து கடக்க வேண்டுமானால் கடலில் ஆழாத பொருள்தான் புணையாக உதவும். நாமோ நெஞ்சமென்ற கல்லைக் கட்டிக் கொண்டு பிறவிக் கடலில் விழுந்திருக்கிறோம்: