பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113


தெப்பத்தைப் பற்றிக்கொண்டு கரையேறிய பிறகு, “அப்பாடா இனித் துன்பமே இல்லை!” என்று இன்பப் பெருமூச்சு விடுவதுபோல அம்மையார் பாடத் தொடங்குகிறார். “ஓ! இப்போது நாம் கரையேறி விட்டோம்; உய்ந்து போகிறோம்'என்று பெருமிதத்தோடு பன்மையில் சொல்கிறார்.

இனி ஓநாம் உய்ந்தோம்.

‘எப்படி உய்ந்தீர்கள்?’ என்று அவர் நெஞ்சம் கேட்கிறது. அவர் தம் நெஞ்சை வேறாக வைத்துப் பேசுகிறார். அவரோடு இணைந்து நின்று பெருஞ் சேமம் செய்த நெஞ்சு அல்லவா? அது தவித்த தவிப்பை அவர் அறிவார். ஆகவே,"நெஞ்சமே, நாம் உய்ந்து போனோம்" என்று மகிழ்ச்சிக் குரலை எடுத்துச் சொல்கிறார்.

‘எப்படி உய்ந்தோம் என்றா கேட்கிறாய்? இதோ பார்: இறைவன் திருத்தாள். எதை எதையோ அடைந்தும் இடர் அறாமல் இன்னலுற்ற நமக்கு இறைவன் திருத்தாள் புணையாகக் கிடைத்தது. அதைப் பற்றிக் கொண்டு உய்ந்தோம். புணையைக் கடலில் நீந்தியவுடன் விட்டு விடுவார்கள். இறைவன் திருவடி அத்தகையது அன்று. சுரைக்காயைக் கட்டிக் கொண்டு நீந்தியவன் அதைத் தன் வீட்டுக்கு எடுத்துச்செல்வது போல நாம் அந்தத் திருவடியை விடாமல் சேர்ந்து விட்டோம். பிறவிக் கடலில் நீந்தும் போது புணையாக இருந்த அதுவே, நமக்கு இன்பம் தரும் பொருளாக இருக்கிறது. ஆதலால் அதைச் சேர்ந்த நமக்கு இனி ஓர் இடரும் இல்லை.

இனியோ நாம்உணர்ந்தோம்
இறைவன்தாள் சேர்ந்தோம்
இனிஓர் இடர்இலோம், நெஞ்சே!

இந்த உலக வாழ்வில் இனிமேல் எந்த வகையான துன்பமும் இல்லை. இது மட்டுமா? இனிமேல் பிறவித் துன்பமே இல்லை.

நா.—8